“சூரரை போற்று” என்ற படத்தில் முக்கிய டயலாக் மேலே போனவனுக்கு மற்றவர்கள் மேலே வரக்கூடாது என்பதுதான். ஏனென்றால் மற்றவர்கள் மேலே வந்து விட்டால் அவர்களுக்கு கீழே இருப்பதற்கு ஆட்கள் இல்லாமல் போகும் என்பதுதான்.
ஒவ்வொரு பொறாமைகளும் ஒவ்வொரு கெட்டவர்களின் குணங்களும் தத்துவமாக சொல்லலாம், நகைச்சுவை கலந்து சொல்லலாம், குத்தலாக சொல்லலாம், இரட்டை அர்த்தத்தில் சொல்லலாம்.. ஒவ்வொருவர் பரிணாமத்தில் அந்த மனோ அசிங்கத்தை விதவிதமான கோணங்களில் காட்சிப்படுத்துவது தான், தத்துவம் போன்று சுருங்க வைத்தல் அல்லது உரைத்தல். ஒரு மனிதனின் மன விகாரம் எவ்வளவு விஷத்தை கொண்டு இருக்கிறது அது எவ்வளவு விஷமத்தனங்களை தன் சுற்றி இருப்பவர்கள் மீது திணிக்கிறது என்பதுதான்.
நிறைய பேருக்கு இவ்வளவு விஷயங்கள் தன் அருகில் இருந்தவர்களுக்கு இருந்தது என்று தெரியாமலே வாழ்வு முழுக்க கடந்து விடுவர். அப்படி கடந்து விடுவதால் மனப்பிறழ்வுக்கு ஆளாகாமல் அவர்கள் கடைசிவரை ஒரு குழந்தை எப்படி தூங்குமோ அப்படி அவர்கள் இரவு தூக்கத்தை பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், அவர்கள் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளுக்கு கூட சில நியாயமான விஷயங்கள் கிடைக்காமல் போனதற்கு காரணம், அந்த விஷமத்தை கொண்டிருக்கும் மனிதர்கள் தன்னை சுற்றி இருந்தது தான் காரணம் என்ற உண்மையை, தன் தோல் தசை சுருங்கும் காலம் வரை புரிந்து கொள்ளாமல் வெள்ளந்தியாய் இருந்தார் என்பதே காரணம்.
பலர் கடைசி வரை இப்படி வெள்ளந்தியாய் வாழ்ந்து, கடைசியில் வெள்ளைநிற ஆவியாகி, ஆத்மாவாகி விடுவர். ஆத்மா ஆன பின்புதான் புரியும் தன் பிள்ளைகளின் அவலநிலைக்கு இந்த விஷமகாரர்கள் காரணம் என்று. அன்று செயல்படுவதற்கு கைகளும் இருக்காது, மூளையும் இருக்காது, கால்களும் இருக்காது. டிவி வைத்துவிட்டு எதிரே மாட்டியிருக்கும் போட்டோவில் இருக்கும் நிலைதான்.
“சூரரை போற்று” என்ற படத்தில் வரும் பல விஷயங்கள் கற்பனை என்றும், முதலில் அவர் தமிழரே அல்ல என்றும், அந்த கோடிகளை கடன் கொடுத்தவர் உதவாதிருந்தால் ஒரு ரூபாய்க்கு டிக்கெட்டுக்கு ஏரோபிளேன் விட்டவர் தான் அவ்வளவு பணமும் கட்ட வேண்டி இருந்திருக்கும் என்று ஆனந்த் அவர்கள் விவரித்துள்ளார்.
“சூரரை போற்று” படத்தை பொருத்தவரையில் அது உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கீழே இருப்பவன் கீழேயே இருப்பதற்கு அரசாங்கம், மேல்தட்டு மக்கள், மேல் ஜாதி, வெள்ளை நிறம் உடையவர்கள் என போட்டி போட்டுக் கொண்டு இந்த சாமானியர்களை அமுக்கு தானே செய்கிறார்கள். டைரக்டர் கொஞ்சம் உண்மை உதாரணம் காட்டினால் இப்போது உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்.
ஐஐடியில் அறிவு இருக்கிறவன், ரிசர்ச் செய்கிறவன் எல்லோருமே வெளியுலகுக்கு தெரிந்து விடுவானா என்ன? சூத்திரன் ஆகவே இருந்தாலும், சூத்திர அண்ணன், சூத்திர மாமன், சூத்திர மாமியார் அடுத்தவன் தன்னை மிஞ்சக் கூடாது என்று போராடுகிறான்.எதிரியின் தோற்று நீங்கள் ஜெயித்து விட்டால் ,உங்கள் வெற்றிக்கு அவர்தான் காரணம் என எல்லோர் மனதிலும் விதைப்பார் உங்களுக்கே தெரியாமல்.
அவன் தனித்து ஜெயிக்கவில்லை என்று முத்திரை கொடுக்கின்றான்.
விஷம் படைத்த விஷமிகள் சரித்திரத்தை உயர்த்தி காட்ட எவ்வளவு தூரமும் மெனக்கெடுவார். யார் மேல் இருந்தால் என்ன? யார் கீழ் இருந்தால் என்ன? என்று தோன்றலாம். உனக்கோ, உன் குழந்தைக்கோ அறிவிருந்தும் ஜெயிக்க முடியவில்லை என்றால், அதற்கு இந்த விஷமிகளின் உத்திகள் காரணம் என்றால், அதைப் புரிந்து கொள்ளாத வெகுளி நீ என்றால் இந்த பூமியில் நீ மனிதனாய் பிறக்காமல் இருக்கலாம்.
விஷத்தை பரவ செய்தவனை விட அதை கவனிக்காமல் அவன் விரும்பியபடி எல்லாம் உத்திகளை பயன்படுத்தி, உன்னை கீழே தள்ளுவதற்கு அனுமதி கொடுத்த உன்னை விஷம் கொடுத்து கொன்று விடுவதுதான் தர்மம் என்ற கூற்றை கொள்கையாக உடையவள் நான். இந்தக் கூற்றை ஒரு ஆத்திரத்துக்காக நான் சொல்லிவிட்டாலும், சைக்கோகளுக்கு பொம்மைகள் தடுக்கப்படுவது உயர்ந்த தர்மம் ஆகும். ஆகவே விஷமிகள் தங்களுக்கு கீழே இவர்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் மனதில் முளைவிடும் பொழுதே புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு கீழே இருக்கும் அந்த மனிதர்கள் நீங்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படிப் பார்த்துக் கொண்டீர்களானால் உங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது
