Skip to content

லலிதா சகஸ்ரநாமம்
தமிழில் (தமிழாக்கம்)

  • by

முன்னுரை:
இந்த லலிதா சகஸ்ரநாமம் எங்கு தேடினாலும் சமஸ்கிருதத்தில் இருப்பதை
அப்படியே தமிழில் இருக்கிறதே தவிர, இப்படி தமிழாக்கம் செய்து எந்த பதிலும்
காணப்படவில்லை. நான் இதை முதன்முதலில் பதிவிடுகிறேன். அதுமட்டுமன்றி
நிறைய பேருக்கு இதை சொல்லச் சொல்லி தொடர்ந்து வெள்ளிக்கிழமைகள்,
பவுர்ணமி, மகாலட்சுமி பூஜை, நவராத்திரி மற்றும் பாலாம்பிகை வணங்கும் போதும்
இவற்றை சொல்லி அவற்றால் கடன் தீர்ந்து, செல்வம் சேர்ந்து, வேலை கிடைத்து,
திருமணமாகி, குழந்தை பிறந்து என்று பல விஷயங்கள் நடந்ததாக பல ஆதாரங்கள்
என்னிடம் இருக்கின்றன

எண்ணியதை நிறைவேற்றிடும் ஸ்ரீ வினாயகா! ஏற்றமே எந்நாளும்
தந்திடுவாய். போற்றியே நின்னையே சரண் அடைந்தோம்.புகழ்யாவும்
அளித்திடுவாய். ஸ்ரீ கணபதியே!
ஓம் உயிரினம் வாழ்ந்திடவே உயர்வெல்லாம் பெற்றிடவே பேரின்ப
செல்வமதை நல்கும் தாயே நின்னை வணங்குகின்றோம் . அனைத்துத்
துன்பங்களைத் தீர்ப்பவளே. அழியாத இன்பத்தைத் தருபவளே. பாசமென்ற
கருணை நிலையானவளே. பரிவுடன் காத்து ரட்சிக்கும் ஸ்ரீ லலிதாம்பிகையே,
ஒப்பும் உவமையும் இல்லாதவளே. சிம்மமதை வாகனமாய்க் கொண்டவளே.
பண்டாசுரனை வதம் செய்திட வேண்டி, இந்திரன் செய்த யாகத்தின்
புனிதமாக அக்னி குண்டத்தில் இருந்து எழுந்த ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே .

விருப்ப மென்ற பாசமதை உடையவளே! கொடுஞ் செயலை அழிக்க
அங்குசத்துடன் ஜொலிப்பவளே. நெஞ்சமென்ற கரும்பு வில்லைப் பெற்றவளே.
ஐந்து கல் மாத்திரைகளை உடையவளே. சிவந்த திருமேனியின் அழகினால்
உலகினை மூழ்கச் செய்பவளே. செண்பகம்,, அசோக மலர்களைக் கூந்தலில்
சூடி இளமை கொஞ்சுபவளே.
நிலவு போன்ற நெற்றியிலே கஸ்தூரி திலகமுடன் மன்மதன் இல்லத்
தோரணங்கள் போன்ற புருவம் உடையவளே.முகப்பொலிவென்ற உள்ளமதில்
நீந்திடும் மீன்கள் போன்ற நயனங்களின் நாயகியே. மலர்ந்திட்ட பொலிவான
நாசியிலே தாரகையின் ஒளிமிஞ்சும் மூக்குத்தி அணிந்தவளே. சந்திர
சூரியர்களைத் தோடுகளாக அணிந்ததவளே. கோவைப்பழம் போன்ற
அதரங்களுடன் சுத்தவித்தை முளைத்தது போன்ற இருபல் வரிசைகளைக்
கொண்டவளே. ரத்தின கலசம் போன்ற ஸ்தனங்களால் ஈசனையே மயங்கச்
செய்த மாதாவே. நிகரற்ற அழகான இடைதனை உடையவளே.
முப்பட்டையான மோஹிக்கச் செய்யும் மூன்று மடிப்புகளை வயிற்றினில்
கொண்டவளே. திருவடித் தாமரைகளில் வணங்குவோர் மன இருளை நகம்
என்ற ஒளியாலே நீக்குபவளே.

காமேஸ்வரன் துடையின் அமர்ந்திட்ட அன்னையே. சிவத்தின் தத்துவமாகி
தனக்கே உரிய துணைவனை அடைந்திட்ட லோக ரக்ஷகியே. மேருவில்
மைய்யச் சிகரமதில் நிலைத்த ஸ்ரீ நகர நாயகியே. நினைத்ததைத் தந்திடும்
சிந்தாமணி இல்லத்தில் இருப்பவளே. ஐந்து பிரம்மாக்களை ஆசனமாய்
உடையவளே. தாமரைக் காட்டில் உறைபவளே. கதம்ப வன வாசியே.
அமிர்தக் கடலின் மத்தியில் வாழ்பவளே. கடைக்கண் கருணையதால்
இஷ்டங்களை ஈடேற்றித் தருபவளே. பண்டாசுரனை வதம் செய்திட சக்தி
சேனையுடன் புறப்பட்டவளே. ஸ்ரீ சக்ரமென்ற தேரினில் சகல ஆயுதங்களுடன்
காணப்பட்டவளே. ஜ்வாலா மாலினி சக்தியால் உருவான அக்னி
கோட்டையின் மத்தியில் இருந்தவளே. பாண்டாசுரன் படைதனை அழித்த
சக்திகளைக் கண்டு மகிழ்ந்தவளே .

சர்வாஸ்தர அஸ்திரமதை பண்டாசுரன் விட்டதுமே இரண்யன் , இராவணன்
, சிசுபாலன் என்ற அரக்கர்கள் தோன்றிடவும் கைவிரல் நக நுனிகளால்
அழிக்கின்ற சாப தாரங்களைத் தோற்றுவித்துமே அசுர வடிவங்களை அழித்து
ஆர்ப்பரித்த ஸ்ரீ லலிதாம்பிகையே. காமேஸ்வர அஸ்திரத்தால்
பண்டாசுரனையும் சூன்ய நகரமதையும் தீயாக்கியவளே. பிரம்மா , விஷ்ணு ,
இந்திராதி தேவர்களால் துதிக்கப்பட்டவளே. சிவனது நெற்றிக்கண்ணால்
எரிக்கப்பட்ட மன்மதனை மீண்டும் உயிர்த்தெழ செய்து அருளிய மாதாவே.
ஸ்ரீமத் வாக்பவ கூடமே நினது முகத்தாமரையாகும். கண்டத்துக்கு கீழான
இடுப்புவரை பகுதியே காமராஜ கூடமாகும் .இடுப்புக்கு கீழான பகுதியே சக்தி
கூடமாகும்.
மூல மந்திர உள் பொருளின் தானாக இருப்பவளே.மூல மந்திர முக்
கூடங்களின் கருத்தாக தன் காரண உருவின் மூன்று பங்குகளாகக்
கொண்டவளே.
பார்ப்பவர் பார்வை பார்க்க படுவதென்ற திருபுட குதலமான மகிழ்வு அமிர்தம்
பருகுபவளே .
சட்சக்கரங்களுக்கு மேல் உள்ள அகுல சக சாரத்தில்(ஸஹஸ்ராரத்தில் )
இருப்பவளே. மணி பூரக சக்ரமதில் சர்வாபரணங்களுடன் மின்னுபவளே.
மூலாதாரத்தில் சிறப்பாக நிலைத்தவளே. விஷ்ணு முடிச்சினைப் பிளந்திடும்
சக்தி படைத்தவளே.
சுதா எனும் அமிர்தமதை நிரம்பச் செய்பவளே. புருவத்தின் நடுவில் ஆக்ஞா
சக்கரத்தின் மத்தியில் இருப்பவளே. மின்னலைப் போன்ற எல்லையற்ற ஒளி
படைத்தவளே. பாக்ய பூஜை மானச பூஜைகளால் உள்ளம் நெகிழ்பவளே.
குண்டலினி வடிவமாகி ஜீவசக்தியான உயிரினை எழுப்புபவளே. தாமரை
இதழ் போன்ற மெல்லிய தேவியே.குடும்பம் உயர்ந்திட உயிரினைத் தரும்
சிவ பத்தினியே .பக்தர்களை ரஷிக்கும் சௌபாக்கியம் தாரனியே. சம்புவின்
துணைவியே.
நவராத்ரியில் தெய்வமான சாரதவே. லக்ஷ்மி கடாக்ஷம் தனைத் தந்திடும்
இனிமைத் திரு உருவே. கற்புக்கரசியாகி காலமாய் ஆனவளே. கார்காலத்
திங்கள் போன்ற வதனம் உடையவளே. பொறுமைக்கே தத்துவமான ஞானப்

புதுமலரே. குற்றமே அற்றவளான சீல குணக் குன்றமே. தாமே யாவற்றுக்கும்
ஆதாராமாகத் தனக்கு அடிப்படையாக ஏதும் இல்லாதவளே. பந்த பாசம்
விட்டவளாகி அழுக்காறு அற்றவளே. உருவமற்றவளாகி கலக்க மற்றவளே.
மூன்று குணங்களுக்கும் அப்பாற்ப்பட்டவளே.
அகண்ட ரூபிணியாகி ஆசையை விட்டவளே. அழிவில்லாதவளாகி என்றும்
முக்தி தருபவளே. மாறுதல் இல்லாதவளாகி எப்பொழுதும்
தூய்மையானவளே. காரணமே அற்றவளாகிக் குற்றம் இல்லாத குணமயில்
ஆனவளே. மதமே இல்லாதவளாகி மதமதை தும்சம் செய்பவளே. கவலையே
காணப்படாதவளாகி அகம்பாவம் அற்றவளே. பாவம் அற்றவளாகி பாவமதைத்
தீர்ப்பவளே. கோபமே விட்டவளாகிக் கோபத்தை அழித்து நிற்பவளே.
சந்தேகம் காணப்படாதவளாகிச் சந்தேகம் தன்னை அகற்றுபவளே. என்றுமே
பிறப்பற்றவளாகிப் பிறவிப் பெருங்கடன் தீர்ப்பவளே. வேற்றுமை
காணாதவளாகி வேற்றுமை களைபவளே. நாசமே தீர்ப்பவளாகி அடியாரை
மரண பயத்திலிருந்து மீட்பவளே.
பக்தி இல்லாதவரை நீண்ட தொலைவு தள்ளி வைப்பவளே. துர்க்கையாய்
ஆனவளே. துன்பமெல்லாம் துடைப்பவளே. அழியாத சுகமெல்லாம் அள்ளியே
தந்திடவே துணையாக வரும் தோஷமற்றவளே ஸ்ரீலலிதாம்பிகையே.
அந்தர் யாகம் பகூர்யாகம் என்ற பூஜா வழிகளை வகுத்துத் தந்தவளே.
மந்திர யந்திர தந்திர முறைகளை அளித்திட்டவளே. முதன்மையான ஸ்ரீசக்ரம்
போன்ற யந்திரங்களின் இதயமானவளே. அறவோர் உள்ளமதும் தத்துவ
பீடங்களையும் ஆசனங்களாய் அடைந்தவளே. மகாயாகங்களால் துதிப்பதற்கு
உரிமையானவளே. மஹாகல்பமதில் மகேஸ்வரன் செய்திட்ட மஹா
தாண்டவத்தின் சாக்ஷி ஆனவளே. அறுபத்து நான்கு கோடி யோகினி
கணங்களால் வணங்கப்பட்டவளே, மனுவினால் உபாசிக்கப்பட்ட ஸ்ரீவித்யா
வடிவானவளே. சராசரப் பிரபஞ்சமதில் தாயாகி ஸ்ரீசக்ரமதில் வாழ்பவளே.
பஞ்சபிரம்ம வடிவமாகி சைதன்ய ரூபமானவளே. தியானம், த்யாத்ரு,
த்யேயம் என்ற மூன்று வடிவமாகி நீதிக்கும் அநீதிக்கும் அப்பாற்பட்டவளே
யாவற்றையும் படைக்க பிரம்ம வடிவமாகியும் உயிரெல்லாம் காத்திடும்
கோவிந்த உருவமானவளே.

அழித்தலைப் புரிந்திடும் ருத்ர வடிவமாகி மறைத்திடுபவளான ஈஸ்வரி
ஆனவளே. சதாசிவ வடிவமாகி அருளினைப் பொழிந்து ஜவகைச்
செய்கைகளுடன் இணைந்த அன்னையானவளே. சூர்ய மண்டல மத்தியில்
காணப்படும் காயத்திரியே. பகமாலினி என்ற நித்யா தேவதை ஆனவளே.
படைப்புக் கடவுள் முதல் புல்புழு வரை யாவற்றையும் ஸ்ருஷ்டித்தவளே.
அறம் பொருள் இன்பம் வீடு என்ற நெறிகளை அளித்தவளே. ஆதியும்
அந்தமும் காண முடியாதவளே. திருமால் நான்முகன் இந்திரனால்
வணங்கப்பட்டவளே. வேதங்களால் உணரப்பட்டவளே. விந்தைகள் பலசெய்து
வாழ்வினை ரம்யாக்கும் தாயே. க்ஷேத்திரங்களுக்குத் தலைவியாகி
க்ஷேத்திரக்ஞனைப் பரிபாலிப்பவளே. எப்பொழுதும் வெற்றி தத்துவமாகி
அனைவராலும் வணங்கப்படுபவளே. வாக்வாதினி என்ற சக்தி வடிவினவள்
ஆகி முனிவர்களால் துதிக்கப்பட்டவளே. ஸ்வதர்மம் விட்டவர்களை
அழிப்பவளே. நினது மகிழ்வினால் பிரம்மாவின் மகிழ்வை ஒரு திவலை
ஆக்குபவளே.
பரா என்ற சப்தஸ்வரூபிணியாகி அறிவைத் தன்னுள்ளே நிலை
நிறுத்தியவளே. எல்லாப் பொருட்களையும் தன்னுள்ளே கொண்டுமே,
அனைத்துத் தேவதைகளுக்கும் சக்திதனைப் பொழிபவளே. காமனால்
துதிக்கப்பட்டுச் சிருங்கார ரசம் நிறைந்தவளே. ஜாலாந்திர பீடத்தில்
இருப்பவளே. ஒட்டியான பீடத்தில் நிலைத்தவளே. பிந்து மண்டலத்தில்
வாழ்பவளே.
ரகசிய யாகத்தால் பூஜிக்கப்படும் தாயே. ஆறு அங்க தேவதைகளுடன்
கூடியவளாகி ஆறு , குணங்கள் கொண்டவளே. வித்தை அவித்தை என்ற
இரண்டு உருவானவளே. அம்மா என அன்புடன் அழைக்கும் ஆஸீ என்ற
சொல் அமிர்தமானவளே. குரு குல்லா தேவியே கௌல மார்க்கமதில்
மனங்கொண்டோரால் வணங்கப்படுபவளே.
வேலனுக்கும் வினாயகனுக்கும் தாய் ஆனவளே. நந்தினயாய் வந்தவளே.
முக்கண்ணியே உணர்ச்சிகளின் வடிவமாகி உணர்வுப் பிழம் பானவளே. சித்த
வித்யா ரூபிணியே சித்தர்களின் தாயாகி எல்லையற்ற புகழ் படைத்தவளே

விசுத்தி சக்கரத்தில் நிலைத்துச் சிறிது சிவப்பானவளே. முக்கண்ணுடன்
கட்வாங்கம் போன்ற ஆயுதம் தரித்த ஒரு முகத்தாயே. பாயாச அன்னத்தில்
ஆசை கொண்டுமே அமிர்தா போன்ற வலிவுள்ள சக்திகளால் சூழப்பட்டவளே.
டாகினி ஈஸ்வரி என்ற பெயர் பெற்றவளே. அநாஹத கலம் கண்டு பச்சை
இணைந்த கறுப்புநிறம் உடையவளே. இருமுகங்கள் கோரப் பற்களுடன்
ஜபமாலை அணிந்தவளே. ரத்தத்தில் நிலைத்துமே காள ராத்திரி போன்ற
சக்திகள் நின்னைச் சுற்றி இருக்க,நீர் நிறைந்த அன்னத்தில் ஆசை
கொண்டவளே. ராகிணி என்ற உருவம் ஆனவளே. மணி பூரக கமலத்தில்
மூன்று முகங்களுடன் வஜ்ரம் முதலிய ஆயுதங்களை தரித்தவளே. சிவப்பு
நிறமுடன் தாமரி போன்றவர்களால் சூழ்ந்து காணப்படுபவளே.
மாமிசத்தில் ஒன்றாகி வெல்லம் இணைந்த அன்னத்தில் ப்ரீதி உடையவளே.
அடியவரைக் காத்திடும் லாகினி ஆனவளே. சுவாதிஷ்டான கமலத்தில்
இருந்து நான்கு பொலிவு முகங்களுடன் பொன்னிற மேனியளாய் , சூலம்
போன்ற , ஆயுதங்களுடன் கொழுப்பு தாதுவில் நிறைந்து பத்ரகாளி
போன்றோர் இணைந்து நிற்க தயிரன்னத்தில் ஆசை கொண்ட காகினி
ஆனவளே. மூலாதார கமலத்தில் நிறைந்திருந்து, ஐந்து முகங்களுடன்
எலும்புடன் இணைந்து அங்குசம் போன்றவை தரித்துமே, வரதா போன்ற
சக்திகள் புடைசூழ பயிற்றம் பருப்பு கலந்த அன்னத்தில் நாட்டம் கொண்ட
ஹாகினி ஆனவளே.
ஆக்ஞா சக்ர தாமரையில் நிலைத்தவளாகி வெண்மையுடன் ஆறு
முகங்களுமாய் மத்தை என்ற தாதுவில் நிறைந்து ஹம்ஸவதி என்ற
சக்திகள் சூழ்ந்திட மஞ்சள் பொங்கலில் ஆவல் கொண்ட ஹாகினி ஆனவளே.
ஆயிரம் தளங்கள் கொண்ட தாமரையில் வீற்றிருந்துமே எல்லா நிறங்களுடன்
ஒளிதந்து சகல ஆயுதங்களைத் தரித்துச் சுக்கிலதாதுவின் தேவதையாகி
எங்கும் திருமுகம் கொண்டுமே எல்லா அன்னங்களையும் ஏற்று யாகினி
ஆன அம்பிகையே.
ஸ்வாஹா வடிவம் ஆனவளே. ஸ்வதா வடிவம் ஆனவளே. மாயையாய்
இருப்பவளே. அறிவில் உயிரானவளே. வேத நாத மானவளே. வேதக்
கருத்தினை முனிவர்கள் தெரிவித்த ஸ்மிருதி ஆனவளே. தனக்கே

உவமையில்லாதவளே. புண்ணியத்தின் புகழ் யாவும் தனக்கே
உரித்தானவளே. மஹா வித்யா ஸ்ரீவித்யா அமைப்பானவளே.
காமேஸ்வரனால் பூஜிக்கப்பட்டுக் காமகோடியாய் விளங்குபவளே.
ஸ்ரீஷோட சாக்ஷரி வித்தையின் இதயம் போன்றவளே. நின்கருணை வேண்டி
ஏவல் புரியும் கோடி லஷ்மிகளைக் கொண்டவளே. பிரதமை முதல்
பௌர்ணமி வரையிலான பதிணைந்து திதிமண்டலங்களில்
ஆராதிக்கப்படுவளே. நின் இடப்புறம் திருமகளும் வலப்புறம் கலைமகளும்
நின்று சாமரம் வீசி வணங்குப்படுபவளே. க்லீங்கார பீடவடிவமான ஸ்ரீ
பராசக்தியே. காமதேனுவாக இஷ்டமதைத் தருபவளே. புவனமதைத்
தன்வயிற்றில் தாங்கிய ஹிரண்ய கர்பவடிவானவளே. எல்லா
உபநிடதங்களாலும் உணரப்பட்டவளாகி நான்கு யுகங்களையும் தன்னுள்ளே
கொண்டவளே. இச்சா சக்தி , ஞானசக்தி , கிரியா சக்தி தோற்றமானவளே.
ஸாம் ராஜ்யப் பதவி வைகுண்டம் கைலாசம்தனை அளிப்பவளே.
அலையாய் எழுந்து வரும் சுருண்ட முன்கேசம் கொண்டவளே. சூரிய
வடிவானவளே. சுகமெல்லாம் தருபவளே. அடியவர்களின் செல்வக் குவியல்
ஆனதாயே. மைத்ரி போன்ற வாசனைகளால் அடையப்பட்டவளே.
சிந்தித்திடவே முடியாத சீர் மிகு தமிழ் ஆனவளே.கலி தோஷம் அதைப்
போக்க வந்த காத்யாயினி ஆனவளே.மாதுளம் பூ போன்ற திருமேனி
ஆனவளே. மான் விழிகள் சுழற்றியதால் மயக்கம் அதைத் தருபவளே.
தாம்பூலம் தரித்த செம்பவள வாய் கொண்டவளே. கண்டவரை மயங்கச்
செய்யும் மோஹ திருவடிவே. நிஷ்டையின் எல்லையில் இருப்பவளே.
தாமரைக் கொடி போன்ற புஜங்களை உடையவளே. தெய்வீக நறுமணமுடன்
கூடியவளே. உமா எனப் பாசமுடன் அழைக்கப்படுபவளே.
பூமா என்ற பரமார்த்த ரூபிணியே. நாம பாராயணத்தில் எல்லையில்லா
மகிழ்வு கொள்பவளே. செம்பருத்தி பூ நிறம் உடையவளே. யக்ஞ
வடிவானவளே. துதிப்பதற்கு உரிய பர்வத ராஜ குமாரியே. மாசற்றவளே சத்ய
ஞான ஆனந்த உருவானவளே. வயது முதிர்ந்தவளே.வரலாறு கொண்டவளே.
பெரிய நாயகியே. கபர்த்தி எனும் சடையன் பத்னியே. காலத்தின்
அர்த்தமாகிக் காலமாய் ஆனவளே.”க” என்ற அக்ஷர வடிவானவளே.
இயற்கையாகவே இனிமை பொருந்தியவளே. எக்காலமும் உதயமாகி

இருப்பவளே. கொடையில் நாட்டம் கொண்டவளே.தருமத்தின் இலக்கணமே.
பெருந்தன்மை வடிவமான தாயே ஸ்ரீ மகேஸ்வரியே. இந்திராணியால்
துதிக்கப்பட்டவளே. அவர் அவர் புண்ணிய பாவம் அடிப்படையில் வாழ்வை
அமைத்து தருபவளே. ஆகாயம் போன்ற அனைத்து உலகினையும்
படைத்தவளே. யாவற்றிற்கும் முதன்மை வடிவான தாயே. தன்னையே
அடையச் செய்யும் மாதாவே. சகல விதமான மரண அச்சம் போக்கிச்
சமாதானம் செய்பவளே. அர்த்த நாரீஸ்வரன் தத்துவ மதின் விமர்ச
உருவானவளே. சகல பிணிகளையும் போக்கி மனோதிடம் தருபவளே.
பிரம்மஞான மலராகி கைலாயம்தனில் அமர்ந்திருப்பவளே. ஆத்ம வித்யா
தாயாகி நவதுர்க்கை வித்தையாய் ஆனவளே. உலகின் முடிவு நேரமதில்
வரப்போகும் பிரளயமதின் சாக்ஷி ஆனவளே. பராசக்தி வடிவமாகி பாருக்கே
புண்ணிய நிழல் தருபவளே. உலகினை ஆட்சி செய்வோர்க்கெல்லாம்
தலைவியாய் விளங்குபவளே.
புனிதமென்ற கனிவு நதியே ஆகிப் பூரித்து வருபவளே. தான் என்ற
அகம்பாவம் அழித்திடவே தட்சனின் யாகம் அதை நாசம் செய்தவளே.
மயங்கியவள் போன்று காணப்படுபவளே. மாத்ருகா வர்ண ரூபமானவளே.
வானவில் போன்று ஒளி படைத்தவளே. இதயத்தில் நிறைந்திருந்து இளமை
பொருந்தியவளே. காவிய வர்ணனைகளில் நிறைந்திருப்பவளே. மிகவும்
ரகசிய வடிவானவளே. பிரம்மாண்ட மண்டலங்களை வேடிக்கையாக
உருவாக்கியவளே. தன்னையன்றி வேறு எதுவுமேயின்றி தனித்து இருந்திடும்
தாயே.
அடியவர் பசிதீர அன்னமதைத் தருபவளே. உயர் நலம் தந்திடும் உத்தமியே.
ராஜாதி ராஜாக்களுக்கெல்லாம் ஈஸ்வரியான அன்னையே.
உலகுக்கே முதன்மையான யாவற்றிலும் சிறந்தவளே. பரிசுத்தத்தின்
பரிசுத்தமான அனேக கோடி பிரமாண்டங்களைத் தோற்றுவித்தவளே.
மும்மூர்த்திகளுக்கும் முந்தையவளான மூத்தவளே. நற்குணங்கள்
யாவற்றுக்கும் நடுநாயமாக இருப்பவளே. மூவுலங்களாலும்
துதிக்கப்படுபவளே. மூன்று அட்சர வடிவமாகிய தெய்வீக திருமலரானவளே.
உண்மையும் மகிழ்வுமே ஒன்றாக இணைந்திருப்பவளே. அகத்தியர் துணைவி
லோபாமுத்திரையால் பூஜிக்கப்பட்டவளே. தனது கருணையால் த்வைத

திருஷ்டி தீர்ப்பவளே. த்வைதத்தினின்றும் இயற்கையாகவே விடுபட்டவளே.
பிரம்மாவின் எல்லையற்ற சக்தி வடிவமான வாக்குதேவதையால்
பிரம்மானந்தம் என்ற உருவமாக பேரின்பம் தருபவளே.துதிப்பவர்
இல்லத்தில் மங்களமாய் நிறைந்தவளே. உயர்நலம் அளித்து பெருநிதி
தருபவளே. நின்னை நாடி வருபவரை அரச பீடத்தில் அமர்த்துபவளே.
ராஜ்ய லட்சுமியாய் விளங்கி பொக்கிஷமதைக் காப்பவளே. மந்தார பூவினில்
நாட்டம் கொண்டவளே. எல்லாருடைய எற்றங்களிலும் நிறைந்திட்டவளே.
மூச்சினைத் தந்துமே மூச்சாக இருப்பவளே.
மல்லனைக் கொன்ற மார்த்தாண்ட பைரவரால் போற்றப்பட்டவளே.
உயிர்களுக்கும் இந்திரியங்களுக்கும் தெய்வமாய் இருப்பவளே. உயிர் சக்தி
இந்திரிய சக்தி தனை அருளிடும் சர்வ சக்தி யானவளே. வீரர்களுக்குப்
பெற்றவளாய்க் காட்சி தருபவளே. முக்திக்கே ஆதாரமான ஸ்ரீ ராஜ
ராஜேஸ்வரி சக்திகளுக்கு மூலாதாரமானவளே. வாழ்க்கைச் சக்கரமதைச்
சுழலச் செய்பவளே. வேதங்களின் ஸ்வாச துடிப்பான காயத்திரியாய்
ஜொலிப்பவளே. சொல்லில் அடங்காத புகழினைப் பெற்றவளே. மனதாழமே
காணமுடியாதவளாகி அற்புத லீலைகள் செய்திட்டவளே. லலிதையின்
முத்திரை மோதிரத்தைப் பெற்று உலகாளும் மீனாட்சியே. மகிழ்வு நிலவாகத்
தவழ்ந்திடும் ஞானமழலையே. அறிஞர்களாலும் சாமான்யர்களாலும்
ஆராதிக்கப்படுபவளே. தாமரை மலரின் மென்மைக்கு இணையான புன்னகை
வடிவானவளே. அரக்கர்களை அழித்திடவே மன அரக்க குணம் அழிப்பவளே.
உலகினையே தன்வயமாக்கி கொண்ட காந்த வடிவானவளே. சத்தியமே
உருவாகி ஜன்மத்தை உயர்வாக்கிடும் சாவித்திரி ஆனவளே. நித்தமும்
நிம்மதியை அளித்திடும் சச்சிதானந்த மானவளே.
அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே. அறிவு கலம்பகமாக
மாந்தரை ஆக்கிடும் சரஸ்வதியே. சாத்திரங்களை உண்டாக்கியும்
சாத்திரங்களால் அறியப்பட்டவளே. தர்மமே உருவான மங்கள சிவனுக்குக்
கொடை என்ற இதயம் ஆகிவிட்டவளே. தலைசான்ற அறவோர்க்கு மோட்சம்
அதைத் தருபவளே. அன்பே உருவானவளாகிப் பாசத்தின் எழில் நிலை
ஆனவளே. கரிய மேகமாகிக் காலமெல்லாம் காத்திடும் மஹா காளி

ஆனவளே. மஹா உக்ர வடிவமான மாதாவே. சண்டன் முண்டன் என்ற
அரக்கர்களை அழித்தவளே. விரதங்களில் எல்லையற்ற ஆசை கொண்டவளே.
பூஜை செய்வதற்கு உகந்த புனிதமானவளே. மேருவில் நிலைத்திட
மென்மையானவளே . மேன்மையானவளே, சகல கலைகளையும் ஹாரமக
அணிந்தவளே. மிகவும் புராதனமான புனிதவதியே. இசையில் அளவிட
முடியாத ஆசை கொண்டவளே. உயிரினிலே நிலைத்திருந்து
உயிரேயேகாப்பவளே. உள் நோக்கில் காணப்படும் ஆன்ம உருவானவளே.
அணுக்களில் அணுவே ஆன பரமாணு ஆனவளே. பிரம்மா சக்தியாகி
பிரம்மானந்த வடிவானவளே.முக்திக்கே இருப்பிடமாகி முக்தி தனை
அளிப்பவளே. எல்லா சக்திகளுக்குமே மூலாதாரமான ஸ்ரீராஜராஜேஸ்வரி
ஆனவளே. பிறப்பு இறப்பு முதுமை என்கின்ற துயரங்களை துடைப்பவனே.
மோக்ஷ இன்பம் தந்து அமைதி என்ற அருமருந்து அளிப்பவளே. கடல்சூழ்ந்த
பூமி வடிவமான காருண்ய தாயே, எங்குமே நிறைந்திருந்து யாவரையும்
தன்வயம்யாக்கிக் கொள்பவளே.
குருமண்டலமாக விளங்கி காமகலா ரகசியம் போதிப்பவளே. மாயையாகி
மதுமதி என அழைக்கப்படுபவளே. சிவ தத்துவத்தை அளித்துச் சிவமாகி
விட்டவளே. ஆனந்தமதின் உயிர்கலையாகி உள்ளமெல்லாம் பூரிப்பவளே.
தில்லை கூத்தன் நடனத்துக்கு ஈடு கொடுத்திட்ட தாயே. நந்தி தேவனால்
உபாசனை செய்யப்பட்டு நற்கதி தரும் தாயே. அழைத்திடும் குரல் கேட்டு
ஓடோடி வருபவளே. அரவணைத்து பக்தர்களை மகிழச் செய்பவளே. காவியக்
கலைகளின் நாயகியாகி கலைகளின் பெருநிதி ஆனவளே. சத்தியம் என்ற
நிலைக்களனாகி சத்தியமாய் நிலைத்து நிற்பவளே. என்றும் மகிழ்வுடன்
இருந்து பால கதிரவனாய் ஒளி கூட்டுபவளே.
தனக்குள் தானே ஆகித் தன்னையே மிகவும் ரசிப்பவளே. விஷ்ணு சக்தியாகி
விஷ்ணுவாகவே ஆனவளே. சாமகானமதில் வெகுவாய்ப் பிரியம்
கொண்டவளே. எப்போதுமே இருப்பவளாகி அழிவற்ற செல்வங்களில்
நாயகியானவனே. உலகங்கள் யாவற்றையும் வென்றவளாகி
சர்வகுணங்களையும் கடந்தவளே. பரிவு என்ற மென் பஞ்சு போன்ற உளம்
நிறைந்தவளே. பாலாம்பிகையாக வந்திட்ட கன்னியாகுமரி ஆனவளே.

சிந்திக்கும் வேளையில் சிவனரிசாரமான திரிபுராம்பிகை ஆனவளே. தாரக
சக்ரமதின் அதிதேவதை ஆன திரிபுர ஸ்ரீயை வயமாக்கிக் கொண்டவளே.
சோம சூர்ய அக்னி குண்டங்களுக்கும் அன்னையான ஸ்ரீ பராசக்தியே.
முழுமையான அழகு பொருந்தியவளாகி யாவற்றுக்கும் முன்பு தோன்றிய ஸ்ரீ
திரிபுராம்பிகையே. பிறப்பென்ற துன்ப நெருப்பினை அணைத்திடும்
அமிர்தமழை ஆனவளே.
பாவமென்ற பெருங்காட்டை யழித்திடும் பெருந்தீ ஆனவளே. தரித்திரம் என்ற
இலவம் பஞ்சை பறக்க செய்யும் சூறைக் காற்று ஆனவளே. முதுமை என்ற
காரிருளை நீக்கிடும் வெயில் ஒளி ஆனவளே. நல்வினை என்ற கடலுக்கு
நிலா ஆனவளே. அடியவன் உள்ளமான மயூரத்துக்ளு மேகமாய் இருப்பவளே.
பிணி என்ற பர்வமதைத் தூளாக்கும் வஜ்ராயுதமாய் வருபவளே. மரணம்
என்னும் மரத்தினை சாய்க்கும் கோடரி ஆனவளே,எல்லா ஆபத்துகளையும்
நீக்கித் தனதான்யம் தருபவளே.வணங்குபவர்க்கு அஷ்ட ஐஸ்வர்யம் , அறிவு
, ஞானம் அளிப்பவளே. ஐம் பெரும் யாகங்களில் கரை காண முடியாத
பற்றுள்ளவளே. .உபாசினி வடிவமாகிச் சுவாசினி பூஜையால் உள்ளம்
சிலிர்ப்பவளே. சின் முத்திரையாய் ஞான முத்திரை வடிவானவளே.
முக்குணம் உருவமாகி முக்குணத்தாயானவளே. முக்கோணமதைக்
கண்டவளே. அதிசய சரிதம் படைப்பவளே. எங்கள் அன்னையே ஆறு
உபாசனா வழிகளைக் கடந்த ஞான மலரானவளே .அஞ்ஞான இருள்
அகற்றும் மெய்ஞ்ஞான சுடரொளி ஆனவளே. ஸ்ரீசக்கரத்தில் வாசம் செய்யும்
மங்களங்களின் தாயானவளே. ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரியே சிவனும்
சக்தியே,சிவனும் சக்தியும் ஒன்றே என்ற உயர் நெறி சாரமதைத் தருபவளே.
சொல்லும் விளக்கமும் ஒன்றாத் தழுவினாற் போன்ற சிவ சக்தி ஐக்ய
வடிவமே.
ஸ்ரீசக்ரத்தில் மேல் நோக்கும் நான்கு முக்கோண சிவசக்ரமும் கீழ்நோக்கிய
ஐந்து முக்கோண சக்தி சக்ரமும் இணைந்திட்டது போன்ற சிவசக்தி
ரூபிணியே, அழிவற்றவளே, நித்ய பேரானந்த நிலையமானவளே,
மாதா ஸ்ரீ லலிதாம்பிகையே
மாதா ஸ்ரீ லலிதாம்பிகையே
மாதா ஸ்ரீ லலிதாம்பிகையே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன