எதிரி ஜெயித்து நீ தோற்று விட்டாய் என அவன் நினைத்து,அந்த கர்வத்தை அவன் உன்னிடத்தில் வெளிபடுத்தவும் செய்தால் …
அந்த காலத்தை எப்படி கையாள வேண்டும் என்பதுதான் இந்த பதிவு .
எதிரிக்கு வலி என்றால் கத்தியால் குத்துவது மட்டுமே பெரிய வலி அல்ல.
மனதாலும் வலி கொடுக்கலாம். அதுவும் கூட புதுமையானது அல்ல. என்றோ உண்டான விஷயம்தான். பதிலுக்கு பதில். அதாவது எதிரி முன்னொரு காலத்தில் உங்களுக்கு துன்பம் ஏற்படுத்தி இருந்தால் அதனால் எதிரியின் மனம் நோக பதிலுக்கு நீங்கள் அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்த வேண்டுமா? என்றால் அதுவும் இல்லை.
இதுவரை யாரும் சொல்லாத, யாரும் கண்டுபிடிக்காத அல்லது தெரிந்தும் சொல்ல தெரியாத ஒரு விதமான மன வலியை தருவதுதான்அது . இதை எதிரிக்கான தண்டனை என்று கூறலாம். இப்படி தண்டிப்பது கூட ஒரு நூதனமான முறை. இந்த முறையை யாரிடமும் சொல்லாமல் செய்ய வேண்டும். இந்த வலி நாமாக யோசித்து கொடுத்தது தான் என்பதை அவர்கள் கண்டுபிடிக்கக் கூடாது. அப்படி தெரிந்து விட்டால் அது சொதப்பல் ஆகிவிடும். அதற்காகத்தான் அதை யாரிடமும் பகிர கூடாது என்று சொன்னேன்.
பொறுங்கள்… நான் விஷயத்தை சொல்வதற்கு முன்னால் இவ்வளவு பீடிகை என்று நினைக்கிறீர்கள்…. ஏனென்றால் விஷயம் அவ்வளவு ஆழமானது. எதிரி என்ற தலைப்பில் நான் வெளியிடுகின்ற பதிவுகளில் இது ஆழமானது, மிக உயர்ந்தது, நடைமுறைச் சிக்கல் உடையது, மிகுந்த சூட்சுமம் உடையது. ஆகையால் கொஞ்சம் நீளமாக இருக்கலாம். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காரணத்தால் தன்னிடம் இல்லாத ஒன்று அடுத்தவனுக்கு இருக்கின்றது என்று ஏங்குவதால், அதுவே பொறாமையாக மாறி உச்சத்துக்குச் செல்கின்றது.
ஏங்குவது தவறல்ல. அது இயல்புதான். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக ஏங்குவதற்கு உரிமையுண்டு. ஏங்குகின்ற ஒரு மனிதன் தன்னால் எது முடியும்? என்ன செய்து வெற்றி பெறலாம்? நம்முடைய சூழ்நிலைகள் என்ன? என்று சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்நாள் முழுக்க சக நண்பர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்களில் குறிப்பிட்டவர்கள் மீது பொறாமை கொண்டு, பகைகொண்டு சதா அவர்களின் மீது மனம் நோகும்படி வெளிப்படையாகவே அவர்களை தாக்குதல், அவர்கள் முன்னேற்றத்தை தடுக்கும் படி சில உக்திகளை பயன்படுத்துதல். இப்படிப்பட்ட குணங்கள் உடையவர்களை தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் இந்த உக்தியை செய்ய சொல்கின்றேன்.
இப்படி ஒரு நுணுக்கமான வலி தர வேண்டும் என்று கூறுகின்றேன். அவர்கள் உங்களை தாக்கியபோது உங்களை வேதனைப்படுத்தி இருக்கலாம் அல்லது முக ஜாடைகளினால் பல காலமாய் உங்களை வேதனைப்படுத்தி இருக்ககூடும். அதையெல்லாம் நீங்கள் உரமாக கொண்டு வாழ்வில் முன்னேறுங்கள். அவற்றை எப்படி உரமாக கொள்ள வேண்டுமென்று வேறு பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.
ஒருவன் வாழ்வில் எல்லா சமயமும் வெற்றி பெறுவான் என்று சொல்ல முடியாது. இந்த பதிவு உன்னை கேலி செய்தவர்கள் வெற்றி பெற்று அதே காலத்தில் நீங்கள் பின்னடைவு அடைந்திருந்தால், அந்த சமயத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு உத்தி ஆகும். இந்த நிலைமை ரொம்ப கடினமான ஒரு விஷயம் ஆகும். உங்கள் மனதை நோகடித்தவர்கள் எதிரில் நீங்கள் வெற்றி பெறுவது நல்ல விஷயம். ஆனால் நீங்கள் பின்னடைந்து இருக்கின்ற சமயத்தில் எதிரி வெற்றி பெற்றிருந்தால் என்ன நிலை? இது மிகவும் கொடூரமான காலம்.
ஏற்கனவே அவர்கள் மிகுந்த கர்வத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்படி ஒரு நிலை என்பது கொடூரமானதாக இருக்கும். அதற்காகத்தான் ஒரு நுணுக்கமான விஷயத்தை இந்த பதிவில் கூறுகின்றேன். இந்த நிலை வெவ்வேறு காலத்தில் நடந்தால் கூட பரவாயில்லை. ஒரே சமயத்தில் நடந்தால் உங்களுக்கு மிகுந்த வலி. அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். நீரும் நெருப்பும் போல். அவனே எத்தனையோ நாள் உன்னை ஜெயிக்க வேண்டும் என்று தான் தவமாய் காத்திருந்தான். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது தவறு அல்ல. உன்னுடைய சிறு பின்னடைவுகளை எல்லாம் அவன் கேலி செய்து கொண்டு இருந்தான். அப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். ஆனால் நீங்கள் அவர்களை நினைத்ததும் இல்லை. அவர்களோடு போட்டி போட்டதும் இல்லை. நீங்கள் வாழ்நாள் முழுக்க வேறு ஒரு இலக்கை தேடி பயணிக்கிறீர்கள். அதை அவர்கள் இடையூறு செய்கிறார்கள் என்பதால்,, மனம் நோகடிகிறார்கள் என்பதால் அவர்களுக்கு தெரியாமல் சில வேலைகளை செய்கிறீர்கள். ஆனால் எதிரிகள் என்ன நினைக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தெரியாமல் நீங்கள் நகர்ந்து செல்வதால், அவர்கள் மீதுதான் நீங்கள் போட்டி இடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
நீங்கள் விழுந்திருக்கும் இந்த சமயத்தில் அவர்களுடைய வெற்றிகளை கண்டு நீங்கள் பொறாமை படக்கூடும் என்று நினைப்பார்கள். அதுதான் அவர்களின் தேவையும் கூட. அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்றால்தான் எதிரிகளுக்கு மிக்க வலி.
நீங்கள் வேறு என்ன செய்கைகள் செய்தால் கூட, எதிரிகள் நீங்கள் பொறாமை பட்டதாகவேதான் எடுத்துக்கொள்வார்கள். அதுதான் அவர்களுக்கு சுகம். அதைத்தானே அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஊரார் கண் பட வாழ வேண்டும் என்று கவிதைகள் உண்டு. பாடல்கள் உண்டு. ஆனால் அதில் சில மகிழ்ச்சிகள் இருப்பதாக என்றோ கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். ஆகையால்தான் அது தொன்று தொட்டு விரும்பும் விஷயமாக இருக்கின்றது.
எதிரிகள் அதையே மிக ஆழமாக சிந்தித்து, இத்தனை காலம் நமக்கு ஏற்பட்ட அந்த வலிகள் உங்களுக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்க வேண்டுமே என்பது தான் அந்த எதிர்பார்ப்பு. ஆனால் நீங்கள் வாழ்ந்த விதம் வேறாக இருக்கின்றது. உங்கள் கொள்கைகள் வேறாக இருக்கின்றது. உங்களுடைய ரசனைகள் வேறாக இருக்கின்றது. உங்களுடைய வெற்றிகளை எல்லாம் நீங்கள் எதிரிகளை நோக்கி செய்வதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
ஆகையால் நீங்கள் எதிரிகளை பார்த்து அழுது கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் அழவில்லை என்றால் கூட நீங்கள் அழுததாகவே எடுத்துக் கொள்வார்கள்.
இதற்காகத்தான் சொல்கிறேன் நீங்கள் அவர்கள் மீது எந்த பொறாமையும் கொள்ளாமல், நீங்கள் விழுந்திருக்கும் விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல், அதற்கான வலிகளை அவர்களிடம் காட்டிக்கொள்ளாமல், அதே சமயத்தில் அவர்களின் வெற்றிகளை நீங்கள் கொண்டாடுவது ஆகும். பாராட்டுவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் போலியாக நடிக்கக்கூடாது. இதைத்தான் நடைமுறைச் சிக்கல் என்று கூறினேன். உங்களை கேலி செய்தவர்களை, எதிரிகளின் வெற்றிகளை கொண்டாட வேண்டும் என்பது மிகக் கஷ்டமான விஷயம்தான்.
உங்களுடைய இலக்குகளை நீங்கள் நிச்சயம் ஒரு நாள் அடைந்து விடுவீர்கள். அதற்கான உழைப்பில்தான் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால், அவர்களின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியும்.
நீங்கள் சிறிதும் அதற்காக வருந்தவில்லை என்று காட்டிக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் வேகமாக சுறுசுறுப்பாக இருப்பது போல் இருந்துகொண்டு, நீங்கள் சந்தோஷமாக இருந்த சமயத்தில் அணிந்த உடைகள் அணிந்து நடவடிக்கைகளை அப்படியே தொடர வேண்டும். இது ஒரு பயங்கரமான மன வலியை எதிரிக்கு தரும். ஆனால் இந்த வலி மற்றும் தண்டனை ஒன்றும், நேர்மை தவறிய குறுக்கு வழியில் எதிரிகளுக்கு தரும் தண்டனை அல்ல. நீ சோகமாக இல்லாமல் இருக்கின்றாய் அவ்வளவுதான்.
உண்மையிலேயே உன்னுடைய வெற்றிக்கு கூட இது வழிவகுக்கும். எதிரிகள் விரும்பியது கிடைக்காமல் போனதற்குக் காரணம் கூட, இத்தனை நாள் மற்றவர்களை கண்டவர்கள் பொறாமை ஏற்பட்டது தான் காரணம். எதிரிகள் அவர்கள் இலக்கை மட்டும் நோக்கி பயணித்து இருந்தால், அவர்கள் விரும்பிய வெற்றிகள் கூட கிடைத்துதான் இருக்கும். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு கிடைத்த வெற்றிகள் கூட அவர்களின் பரந்த மனப்பான்மை கொண்டு அல்ல. அவர்களுடைய சூழ்நிலையோ, உறவுகளின் உதவி,தெரிந்தவர்கள் உதவி பயன்படுத்தி சில வெற்றிகளை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றது.
சொல்லப்போனால் அந்த வெற்றியை எதிரிகளால் நிம்மதியாக கொண்டாட முடியாது. நீங்கள் எதிரிகளை பார்த்து பொறாமைப்பட்டு கொண்டிருப்பீர்கள் என்று இரவு பகலாய் நினைத்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் நீங்கள் இப்பொழுது பின்னடைவு அடைந்து விட்டீர்கள் என்ற நினைப்பிலேயே தான் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட சமயத்தில் நீங்கள் எதிரிகள் வெற்றியைக் கொண்டாடுவதும், உங்களுடைய கஷ்டத்தை காட்டிக் கொள்ளாமல் இருப்பதும், எதிரிகள் வெற்றி பெற்றது பற்றி உங்களுக்கு பெரிய பிரச்சினையே இல்லை என்று காட்டிக் கொள்வது, ஒரு கொடூரமான மன வலியை அவர்களுக்கு கொடுக்கும்.
அவர்களைப் பார்த்து நீங்கள் பொறாமை படவில்லை. அதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்பது, எதிரிக்கு தாங்க முடியாத வலி, ஆனால் அது என்ன வலி என்று வெளியில் சொல்லத் தெரியாது.
எதிரிகள் உங்களின் கண்ணில் ஒரு வலியை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். உங்கள் மனதின் ஆழத்தை அவர்கள் துழாவித் துழாவி தேடுகின்றார்கள். எங்காவது ஒரு வார்த்தை விடமாட்டீர்களா! ஏதாவது ஒரு வகையில் வெளிபடுத்த மாட்டீர்களா? முக ஜாடை தெரியாதா? என்று தேடிகொண்டிருகிரார்கள். எதிரிகளின் வெற்றியை கூட அவர்கள் கொண்டாட மறந்து விட்டார்கள். உங்களுக்கு வலியை கொடுக்கின்றதா? என்பது பற்றி தான் அவர்கள் இரவு பகலாக சிந்திக்கும் விஷயமாக இருக்கின்றது.
எதிரிகளின் வெற்றி உங்களை இம்மியும் அசைக்கவில்லை என்பது பெருத்த ஏமாற்றம் ஆகிறது. மனதில் ஒரு மலையே வந்து இறங்கியது போல் எதிரிக்கு இருக்கும். யாரிடமும் எதுவும் சொல்ல முடியாது.
எங்கள் மீது அவர்கள் பொறாமை படவில்லை, அதுதான் எங்களுக்கு வலி என்று எதிரியால் சொல்ல முடியுமா?
இத்தனை நாள் நமக்கு இருந்த அதே உணர்வுதானே அவனுக்கும் இருக்க வேண்டும், என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. ஏனென்றால் அவர்கள் வாழ்நாள் முழுக்கவே குறுகிய மனப்பான்மையோடு இருந்திருக்கின்றார்கள். நீயும் அப்படி இருப்பாய் என்பது அவர்களின் கணிப்பு.
நீ சோர்ந்து போய் அழுதுகொண்டு, களைப்பாக துவண்டு இருப்பாய்
என்று நினைப்பார்கள் .மற்றும் நீ வாய் விட்டு எதிரியிடம் புலம்ப வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
அதற்காகத்தான் சொல்கிறேன் உங்களால் முடியவில்லை என்றால் கூட வேண்டுமென்றே மகிழ்ச்சியாய் காட்டிக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே நன்றாக சாப்பிடுங்கள். வேண்டுமென்றே நன்றாக உடை அணியுங்கள். வேண்டுமென்றே அவர்களிடம் அன்பாக பேசுங்கள். உங்களுடைய கண்ணில் எங்கு தேடினாலும் எதிர்ப்பு தெரியக்கூடாது. இது அவர்களுக்கு மரண வலியை தரும். இது நேர்மையான தண்டனைதான். இதில் பழிக்குப் பழி இல்லை, குறுக்கு வழியும் இல்லை. பாவமும் இல்லை. கர்மாவும் இல்லை. இதனால் கடவுளிடத்தில் நமக்கு தண்டனையும் இல்லை. காலமெல்லாம் காயப்படுத்தியவர்க்கு இதைவிட சிறந்த தண்டனை வேறொன்றுமில்லை.
ஆனால் வெறுமனே நீங்கள் இப்படிப்பட்ட செயல்களை செய்து கொண்டே இல்லாமல், வேறு ஒரு இலக்கை நீங்கள் அடைய, அவர்களுக்கு தெரியாமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். நீங்களும் வெற்றியாளர் தான் என்ற ஒரு விஷயத்தை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க கூடாது. வெற்றியை நீங்களும் பெற்று தான் ஆகவேண்டும்.
சிறிது காலம் தாழ்த்த லாம். ஆனால் வெற்றி ஒருநாள் கிடைத்தே ஆகவேண்டும். அன்று நீங்கள் நல்ல குணங்களோடு இருப்பதை அவர்கள் பார்க்க வேண்டும். எதிரிகள் வெற்றி பெற்றாலும் சந்தோஷப்படும், நீங்கள் வெற்றி பெற்றாலும் சந்தோஷப்படும் உங்கள் குணத்தை வாழ்நாள் முழுக்க எதிரிகளுக்கு உணர்த்த வேண்டும். இப்படிப்பட்ட தியானத்தை(தியாகம் அல்ல) அவர்களால் செய்ய முடியாது என்பதை உணர்த்த வேண்டும்

அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்றால் அது தான் அவர்களுக்கு கொடுக்கும் வலி.
புரிந்து கொண்டால் வாழ்க்கை விளையாட்டாய் இருக்கும்
ஆம் சரியாக சொன்னீர்
Thank you!!1