Skip to content

சிவவாக்கிய சித்தர் சிவன் பாடல்

  • by

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம் நமசிவாய)
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதவா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராம என்னும் நாமமே(ஓம் நமசிவாய)
இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாதம் நீள்முடி என் திசைக்கும் அப்புறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ(ஓம் நமசிவாய)
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நம் கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்
எண் கலந்துநின்ற மாயம் என்ன மாயம் ஈசனே(ஓம் நமசிவாய)
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே(ஓம் நமசிவாய)
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கு என்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ

இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொனம்பலதுலே தெளிந்ததே சிவாயமே(ஓம் நமசிவாய)
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கு தில்லையே(ஓம் நமசிவாய)
இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை எண்ணலாகுமோ
இல்லை அல்ல என்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டோர் இனி பிறப்பதிங்கு இல்லையே(ஓம் நமசிவாய)
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில்ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணெல்லாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே(ஓம் நமசிவாய)
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம் நமசிவாய)
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம் நமசிவாய)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன