Skip to content

எதிரியின் வெற்றியை யார் கொண்டாட முடியும்? (எதிரி 8)

தன்னம்பிக்கை அற்ற மனநிலை இருந்து எதிரியை ஜெயிப்பது கடினம் என்று உங்களுடைய ஆழ் மனம் நினைத்தால்,  நீங்கள் எதிரிகளின் தவறுகளையும், செய்கைகளையும் சதா வகை படுத்துவதோடு அல்லாமல் அவர்களுடைய உடல் அசைவுகள், தோற்றம், பேசும் முறைகள் அனைத்தையும் கேலியாக பார்ப்பீர்கள்.

 அழகான நல்ல விஷயமாக இருந்தால் கூட உங்களுக்கு அது அசிங்கமாகவே  தெரியும். ஒருவேளை உங்களின் மனம் இவர்களை நாம் ஜெயிப்பது சுலபம். அதற்கான சக்தி நம் கையில் உள்ளது என்று உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட தீங்கையும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அதைப்பற்றிய சிந்தனை மட்டும் இருக்கும்.

அவர்களை ஜெயிப்பதற்கு நிச்சயமாக  அவர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளத்தான் வேண்டும். அவர்களின் எல்லா செயல்களும் புரிய வேண்டும் என்பதற்காக அதிக நேரத்தை அதற்காக ஒதுக்குவது அல்லது அவர்களை ஜெயிக்க வேண்டும் என்பதே வாழ்வின் முக்கிய குறிக்கோள் ஆகிவிட்டால், வாழ்க்கையின் முன்னேற்றத்தை குறைப்பதற்கு அதுவும் ஒரு காரணம் ஆகிவிடும்.

 உனக்கு சுவாரசியம் உள்ள படிப்பு, பொழுதுபோக்கு, தனிப்பட்ட திறமைகள் இவைகளை உன்னிப்பாக கவனித்தல் என்ற விஷயத்தை நிறைவேற்றும் நேரத்தில் எதிரியின் தோற்ற குறைவுகள் பற்றிய ஈடுபாடு.  உதாரணமாக குண்டாக இருக்கிறார்கள். எதிரி பேசும்போது வாய் கோணலாக இருக்கின்றது. இப்படிப்பட்ட விஷயங்களில் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என்பதால், அதன் பக்கம் மனம் போய்விட்டால் உங்களின் தனித்தன்மைகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது போன்றவற்றில் ஈடுபாடு குறைந்து விடும்.

 இதே நிலை எதிரிக்கும் இருக்கும் இல்லையா? அவர்களும் அப்படி உங்களை பார்த்துக் கொண்டிருந்தால், அப்படிப்பட்ட பார்வையை நீங்கள் தவிர்க்க வேண்டுமென்றால், நீங்கள் எதிரிகளை உங்களை அண்ணாந்து பார்க்கும்படி, வியக்கும்படி செய்தால்தான்  உங்களின் உடல் தோற்றங்களை,செயல்களை  யாரும் கவனிக்காமல் உங்களின் உயரத்தை மட்டும் கவனிக்க நேரிடும்.

 அதாவது நேர்மை, அறிவு, திறமை போன்ற விஷயங்கள் மேலோங்கி இருக்கும் பொழுது அசிங்கமாய் தெரியும் விஷயங்கள் அறிவால் மறைக்கப்படும். ஆனாலும் எதிரியின் அசிங்கங்களை தேட ஆரம்பித்து விடுவதால், அதில் இருக்கின்ற சுவாரசியத்தை அனுபவிப்பது மனித மனம் ஆகும்.

அந்த சுவாரசியத்தில் போகும் போதே  அவரும் தம்மை இப்படித்தான் பார்க்கக்கூடும் என்ற உணர்வு உடனே எழ  வேண்டும். இல்லை என்றால்  எதிரிக்கு லாபம்தான். உன்னை மேம்படுத்தும் நேரத்தை நீ இழந்து விடுகிறாய் என்பது  ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இந்த பதிவின் முக்கிய நோக்கமே ஒருவன் எப்படி எதிரியின் வெற்றியை கொண்டாட முடியும்? யாருக்கு அது சாத்தியம்? என்பது பற்றி தான்.

 ஆனால் அது லட்சத்தில் ஒருவருக்கு தான் முடியும்.

பொதுவாக எதிரியை பற்றிய தவறுகளையும், அசிங்கங்களையும் கூட தனது வெற்றியாய் பார்க்கின்ற மனிதர்கள் தான் அதிகம். எப்படிப்பட்ட ஒரு உன்னத நிலை ஒருவனுக்கு இருந்தால் அவன்தான் எதிரி வெற்றியை கொண்டாட முடியும் என்பதற்கு மகாபாரதத்தில் இருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டோமானால், இந்த உன்னத மனநிலையின் ஆழம் புரியும்.

 மகாபாரதத்தில், வில் ஏந்தி அம்பை சரியாக எய்தால்  திரௌபதியை மணம் முடிக்க முடியும். ஆனால் அது சாதாரண அம்பு  அல்ல. மிகுந்த எடை உடைய ,மேலே இருக்கின்ற பொருளை  கீழே இருக்கின்ற நிழலில் பார்த்து எய்த வேண்டும். வீழ்த்த வேண்டும். உலகில் சிறந்த வில்லலாளர்களால்  மட்டுமே இது சாத்தியம்.

 அர்ஜுனன் மட்டுமே உலகில் சிறந்த வில்லாளன் என்ற நிலை இருக்கும் பொழுது, அவருக்கு இணையான வில்லாளன் கர்ணனும் ஆவார். திரௌபதியை மணமுடிக்க வேண்டும் என்றால்,  யார் அந்த வில்லை குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எய்கிரார்களோ,  அவர்களுக்கு திரௌபதி என்ற ஒரு நிலை. கர்ணன் கௌரவர்களோடு இணைந்து போட்டிக்கு வருகிறார். அநியாய பிரிவினரின் நண்பன் கர்ணன் என்று ஆகி விட்டதால், அதர்மத்தின்  பக்கம் ஜெயிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று கர்ணனை தவிர்ப்பதற்கு, வேறு ஒரு காரணம் சொல்லி இதில் அவர் பங்கு கொள்ள முடியாது என்று திரவுபதியின் தந்தை கூறிவிடுகிறார்.

 இதற்கு பின்னால் இருந்து எல்லாவற்றையும் இயக்குவது கிருஷ்ணன் தான். எந்த  காரணத்துக்கு கர்ணனை தவிர்த்தார்கள் என்பது பற்றி இங்கு தேவையில்லை. எதிரியின் வெற்றியை கூட யாரால் ரசிக்க முடியும், வாழ்த்த முடியும் என்பது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

 ஒருபுறம் அர்ஜுனன், கர்ணனுக்கு சகோதரன் ஆவான். இன்னொருபுறம் கர்ணனுக்கும் திரவுபதி மீது விருப்பம் இருந்தது. ஆனால் அர்ஜுனன் சரியாக அந்த அம்பை எய்து சாதனை படைத்த போது உடனிருந்த கௌரவர்களையும் கர்ணன் பாராட்ட சொல்வான்.

அதை எப்படிச் சொல்வான் என்றால் ,

“இன்று அவன் செய்த சாதனையை நாம் பாராட்ட வில்லை என்றால், வரும் காலங்களில் நாம் செய்யும் சாதனைகளை யார் பாராட்டுவது” என்று…. இந்த வரிகளை அவன் உதிப்பதற்கு காரணம் என்னவென்றால் உலகில் சிறந்த கொடை வள்ளல் கர்ணன். தானம் செய்கின்ற பரந்த மனப்பான்மை. அதே சமயத்தில் போர்க்கலையில் சிறந்த அறிவு. கர்ணனும்  சிறந்த வில்லாளன்தான் . இப்படி  தன்னிடம் பல திறமைகள் இருப்பதால்தான் அவனால்  அர்ஜுனனை பாராட்ட முடிந்தது. ஆனால் இது சகோதர பாசம் காரணமாக இருக்கும் என்று எடுக்க முடியாது. ஏனென்றால் உலகில் மிகப்பெரிய எதிரிகள் உருவாவது எப்படி என்றால், ஒரே தாயின் வயிற்றில் பிறந்து, தான்  மட்டும் ஒதுக்கப்பட்டு,  அதே தாயின் வயிற்றில் பிறந்த மற்ற சகோதரர்கள்தான் மிகப்பெரிய எதிரிகளாக மாற வாய்ப்புண்டு.

 இப்படிப்பட்ட நிலையில்தான் கர்ணனால் அர்ஜுனனை பாராட்ட முடிந்தது. தன்னிடம் உள்ள உயர்ந்த குணமும், மிகுந்த திறமைகளும், தன் மீது மிகுந்த நம்பிக்கையும்  பெற்றிருப்பதால் எதிரியை பாராட்டும் மனநிலை கிடைக்கும்.

இந்த பாராட்டும் விஷயத்துக்கு உதாரணமும் நாம் இங்கிருந்து எடுக்கலாம். எதிரியின் அங்க அசைவுகள், தவறுகள், குற்றங்கள் ரசிக்கப்படுகிறது என்பதற்கும் நாம் இங்கிருந்து உதாரணம் எடுக்கலாம். பாண்டவர்களின் குற்றங்களை மட்டுமே தேடித்தேடி பார்பவர்களாக கௌவ்ரவர்கள் இருப்பதால்,  அவர்களிடம் ராஜ்யத்தை பிடுங்கினாலும், அரண்மனை இன்றி காடுகளில் வாழ்ந்தாலும் அவர்களை ஜெயிப்பது கடினம் என்று பயம் கொண்ட கௌரவர்கள், சகுனியின் துணையோடு இப்படி கேலி செய்வார்கள்.பாஞ்சாலி 5 பேரை மணந்து கொண்டாள் என்றும் , அவர்கள் 5 பேரும் ஒரு பெண்ணை  மணந்து கொண்டார்கள் என்றும்  இந்த  விஷயத்தையே சுற்றி சுற்றி கேலி செய்வது. மற்றும் சூதாடி நேர்வழியின்றி பாஞ்சாலியை வென்று அவளை அவமானப்படுத்த வேண்டும்.

இந்த குறுக்கு வழிகளை தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள், நேர்மை அற்றவர்கள் இப்படிப்பட்ட வழிகளை தான் கையாள்வார்கள். இரண்டு தரப்பட்ட விஷயத்துக்கும், இரண்டு தரப்பட்ட மனிதர்களுக்கும் மகாபாரதத்தின் இந்த ஒரு நிகழ்ச்சியே சிறந்த சான்றாகும்.

 தன்னம்பிக்கை இருப்பவர்கள்  எதிரியைக் கூட மகத்தான காரியங்கள் செய்யும் பொழுது மனதார பாராட்ட முடிகின்றது ஆனால்

அவநம்பிக்கை உள்ளவன்  மனதுக்குள், எதிரில் இருப்பவன் கையில் ஆயுதங்கள் இல்லாத போதும் கூட, அவன் வெற்றி அடைகின்ற பலம் இருக்கின்றது. தன்னிடம் எவ்வளவு ஆயுதங்கள் இருந்தபோதிலும் இவனை ஜெயிக்க முடியாது போலும் என்ற சிறிதளவு அவநம்பிக்கைதான், எதிராளியை உலகமே பாராட்டும் தருணம் வரும் போதும் பாராட்ட முடியாமலும், அவர்களை கேலி செய்தும், அவர்களை அவமானப்படுத்தியும்  திருப்தி அடைகின்றனர் என்பதற்கு மகாபாரதத்தின் இரண்டு நிகழ்ச்சிகளுமே  இதற்குச் சான்றாக இருக்கின்றது.

2 thoughts on “எதிரியின் வெற்றியை யார் கொண்டாட முடியும்? (எதிரி 8)”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன