எதிரி ஐந்தில் எதிரிகளை எப்படி வகைப் பிரிப்பது என்று எதிரி 6 ல் பார்க்கலாம் என்றும் கூறி இருந்தேன் . அதில் சாம்ராஜ்யங்களாக இருந்தாலும்,உலக மக்களாக இருந்தாலும் மிக நெருங்கிய உறவுகள்தான் மிகுந்த எதிரியாக போகும் வாய்ப்புகள் அதிகம். அவைகள் முதுகு பக்கமாக நிற்கும் படைகள் ஆகும். முதுகுப்பக்கம் கண்களை வைத்திரு. அந்தப் பக்கம் இருந்து வரும் அம்பு இதயத்தை பாதிக்கும். முன்புறம் இருந்து வருகின்ற அம்பு தலையை அறுக்கும் என்றேன்.
இந்த பதிவில் இந்த எதிரிகளை எப்படி வகைப் பிரிப்பது என்று பார்ப்போமானால், வீடாக இருக்கட்டும், அலுவலகமாக இருக்கட்டும், அரசாங்கமாக இருக்கட்டும், நல்ல நண்பனாக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் ஒரே கோட்பாடுதான். ஒருவன் உன்னை தொடர்ந்து எதிர்க்கிறான். ஆனால் அவனுக்கு நல்ல குணங்கள் இருக்கின்றன. ஆனால் உன்னிடம் எதிர்ப்பு கொண்டிருக்கின்றான். ஒருவேளை அவன் நல்லவன் இல்லை ஆனால் அவன் வைத்திருக்கின்ற கம்பெனி உனக்குத் தெரிந்த வேலையை கொடுக்கும் கம்பெனி. அல்லது அவனுடைய குடும்பம் பெரிய புகழ்பெற்ற தலைமுறை. அல்லது அவன் வீட்டுப் பையன் மீதோ, பெண் மீதோ அழிக்க முடியாத காதல் வந்துவிட்டது. இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்து, இப்படிப்பட்ட பாசிடிவ் விஷயங்கள் எல்லாம் இருந்து, நீயும் அவனும் ஒரே பள்ளியில் அல்லது நீயும் அவனும் ஒரே தெருவில் அல்லது நீயும் அவனும் ஒரே குடும்ப தொடர்புகள் இருந்து எலியும் பூனையுமாக இருக்கின்றீர்கள்.
இன்னும் பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்ற ஒரு சூழ்நிலை இருக்கும் பொழுது, அவர்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற பகையை அழிப்பதற்கு எல்லா உத்திகளையும் பயன்படுத்துங்கள். அவர்களோடு நண்பனாக முயற்சி செய்யுங்கள். இப்படி அறிவுப்பூர்வமாக உன் எதிரிகளை நீ வாழ்க்கையில் குறைத்துக்கொண்டால் உன் வாழ்வு வளம் பெறும்.
ஒரு இருபது வருடம் கழித்து மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு நிலவைப் பார்த்து யோசித்துப் பார்த்தால், அன்று நாம் இவர்களை நேருக்கு நேர் எதிர்த்துக் கொண்டே போய் இருந்திருந்தால், இப்படிப்பட்ட நல்லதெல்லாம் நடந்து இருக்காது.
தன்னுடைய சுய கௌரவம், எதிர்ப்புகள் அன்று தீயில் போட்டு எறிக்கும் மனப்பக்குவம் இருந்தது அற்புதம். அந்த வயதில் தனக்கு ஒருவேளை ஏட்டிக்கி போட்டி என்று நினைத்திருந்தால் இன்று இந்த ஒரு நல்ல விஷயம் நடந்திருக்காது. என்று சிந்தித்து நீங்களே உங்களை புகழ்ந்து தோள் தட்டிக் கொள்ளும் காலம் வரும்.
இதே மனிதர் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நீ எவ்வளவு விட்டுக்கொடுதாலும் ஒரு பனிப்போர் தொடர்ந்துகொண்டே இருப்பதோடு, உன்னை பற்றி அவர் பின்னால் பேசுவதும், ஜாடைமாடையாக பேசுவதும், உன் முன்னேற்றத்தில் அவருக்கு விருப்பமில்லை என்றாலும் கூட வெற்றி பெற்றது நீதான்.
அவனுக்கு உன்னை பிடிக்காது தான். அவனை சுற்றி உள்ள சில நல்ல விஷயங்கள் உன் வாழ்வை உயர்த்துவதாக இருந்தது என்று, நீதான் உத்திகளைப் பயன்படுத்தி உனக்கு அவன் மீது இருந்த பகையை அழித்தாயோ அல்லது அழித்தது போல் நடித்தாயோ…
ஆனால் அவனுக்கு உன் மீது சிறுவயதிலிருந்து உன் மீது இருந்த எதிர்ப்புகள் தூங்கிக் கொண்டுதான் இருக்கும். அவன் உன்னைப்போல உன்மீது இருக்கின்ற எதிர்ப்பை அழிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன? அதனால் அவனுக்கு எந்த லாபமும் இல்லை. உன் முயற்சியால் அவன் எதிர்ப்பை குறைத்து கொண்டு இருக்கின்றான் அவ்வளவுதான். ஆனால் நீ ஜெயித்தது ஜெயித்தது தானே.
அந்த ஒரு நபர் மட்டும் உன் வாழ்வின் ஒட்டுமொத்த வெற்றிக்கு காரணம் அல்ல. எப்படி ஒவ்வொரு சிறிய தனிப்பட்ட வாடிக்கையாளரும் ஒரு பெரிய தொழிலுக்கு வெற்றியை தருகிறார்களோ, அப்படித்தான் எதிரிகளை குறைத்துக்கொண்டால் லாபங்கள் குவிவது உங்களுக்கே.
அவர்களுக்குள் அந்தப் பனிப்போர் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அதை முற்றிலும் அழிக்க முடியவில்லை என்று சில காலம் கழிந்து நன்கு புரிந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைவிட்டு விலகி விடலாம் . ஒருவேளை அவர்கள் உங்களை நண்பராக ஏற்றுக் கொண்டால் வாழ்வு முழுக்க தொடரலாம்.
எதிரிகளை கண்டுபிடி என்கின்ற ஒரு வார்த்தை மனரீதியாக, பிரபஞ்ச ரீதியாக நல்லவர்களை எல்லாம் கூட கெட்டவர்களாக காட்டுகின்ற கண்ணாடி போன்று மாறிவிடும். ஒருவனால் தனக்கு மிகுந்த நன்மை ஏற்படும் என்கின்ற விதி இருந்தும், தற்காலிகமாக நடக்கின்ற பனிப்போர், நிறைய எதிரிகளை கண்டு பிடிக்கின்ற சுவாரசியத்தில் பார்க்கும் எல்லோரையும் எதிரிகளாக பாவித்தால், உங்களுக்கு என்று சொல்லிக்கொள்ள பிரமாதமான ஒரு வாழ்க்கை இருக்காது.
கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள், சமயத்தில் உதவும் நண்பன், தாத்தா, பாட்டி போன்றோருக்கு இடையில் கூட எதிரிகள் உருவாவது உண்டு. 99% அதை குறைக்க நம் தரம் தாழ்ந்து, தலை தாழ்ந்து அந்த பகையை அழிக்க முற்படவேண்டும். இது ஒரு சூட்சுமம். உன் வாழ்வை உயர்த்தி விடும். இது முதல் கட்ட வகை பிரிவு.
இரண்டாம் கட்ட பிரிவு என்னவென்றால் உன்னிடம் நன்றாக பழகி விட்டு பலமுறை உனக்கு பின்னால் உன்னைப்பற்றி அவதூறு பேசிக்கொண்டு, உன் மீது அவர்களுக்கு கடும் போட்டி இருக்கின்றது. ஆனால் எதிரில் காட்டுவதில்லை என்றால் அவர்களைவிட்டு வெகுதொலைவில் போய் விடுவது நல்லது. ஊரை விட்டு ஓடிவிட முடியாது. அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில்மெல்லிய சுவர் எழுப்ப வேண்டும். முக்கியமான எதையும் அவர்களோடு பகிர கூடாது. அவர்களோடு தொடர்பு இருப்பவர்களிடமும் பகிர கூடாது.
முக்கியமாக அவர்களுக்கு உங்கள் மீது உள்ள பகையை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று காட்டிக் கொள்ளக் கூடாது. மாறாக என் முன்னேற்றத்தில் உங்களுக்கு விருப்பம் உள்ளது என்று காட்டிக் கொள்ள வேண்டும். இது ஒரு பயங்கரமான ஒரு ஆழமான பலபல சாம்ராஜ்ஜியங்களை தூக்கி சாப்பிடும் ஒரு உத்தி ஆகும்.
முதல் பிரிவில் சொன்னது போன்று ஒரு இருபது வருடம் கழித்து இனி இவர்களால் நமக்கு எந்த கெடுதலும் விளைவிக்க வாய்ப்பில்லை என்ற காலம் வரும்போது, 20 வருடம் முன்னால் நடந்த விஷயத்தை ஏதோ ஒரு சபையில் பெயர் சொல்லாமல் பூடகமாக உரைக்கலாம். அதாவது 20 வருடம் கழித்து, 20 வருடம் முன்பே நீ எனக்கு பயங்கரமான எதிரி என்று எனக்கு தெரியும் ஆனால் இத்தனை வருஷம் எனக்கு தெரியாதது போல் நான் நடித்தேன் என, பூடகமாக பழைய விஷயம் ஒன்றை மட்டும் நினைவுபடுத்த வேண்டும். ஆனால் இன்று உன்னுடைய பல வெற்றிகள், அவர்கள் தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாதபடி கைமீறிப் போய் இருக்க வேண்டும்.
அந்த சமயம் ஒரே ஒரு முறை வெளிப்படுத்துவது… மகாபாரதத்தில் கிருஷ்ணரின் சூட்சுமங்கள் பாண்டவர்களின் வெற்றிக்கு வழி வகுத்தது போல், குருஷேத்திரம் என்கிற உங்கள் வாழ்வில்,உங்களுக்கு நீங்களே கண்ணனாக இருந்து இருக்கின்றீர் என்பதுதான் இரண்டாம் கட்ட எதிரியை வென்றது ஆகும்.
இப்படித்தான் எதிரிகளை இரண்டு வகையாக பிரிக்க வேண்டும். முதலில் சொன்னது, இவர்களால் தனக்கு வாழ்வில் நல்லது நடக்கும் என்றால் அவர்கள் எதிர்த்தாலும் நீங்கள் எதிர்க்கக் கூடாது. எதிரில் நன்றாக பழகி, பின்னால் பல உத்திகளை பயன்படுத்தி, அவதூறு பேசி, உங்களோடு அவர்களுக்கு கடும்போட்டி இருக்கிறது என்று நன்றாக தெரிந்து விடுவதுதான் இரண்டாம் கட்ட எதிரி. அவர்களைத்தான் நீங்கள் நூதனமாக அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கின்ற போட்டியே உங்களுக்கு தெரியாது என்று காட்டிக் கொள்வதுதான். ஆனாலும் அவர்கள் எதிரி என்று தீர்மானித்து காய்களை நகர்த்த வேண்டும். தொடர்ந்து நான் எதிரியை பற்றியே பேசிக் கொண்டு இருக்கின்றேன் என்று நினைக்க வேண்டாம். நான் எப்பொழுதுமே சிறுவயதிலிருந்து பரிட்சை எழுதும் பொழுது, பெரிய கேள்விக்கு முதலில் பதில் அளித்து விடுவேன். அன்றாட வேலைகளிலும் கடினமானது முதலில் முடிப்பேன். அப்போதுதான் இறுதியில் சுகமான விஷயங்கள் மிகவும் சுகமாக ஆனந்தமாக இருக்கும். நன்றி
