எதிரிகளில் பலவகை உண்டு. இதுவரை எட்டு வகை கூறி இருக்கிறேன். இன்று நான் சொல்லப்போவது எதிரிக்கு உன்னால் தவறு ஏற்பட்டது என்பதை பற்றி அவர்களுக்கு வருத்தம் இல்லை. உன்னால் தவறு ஏற்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமே. பொதுவாக இந்த எதிரி என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. மன நலத்துடன் சம்பந்தப்பட்டது.
சிறுவயதிலிருந்து தன்னிடம் அன்பு கொண்ட ஒருவர், வித்தியாசமாக நடந்து கொள்கிறார் அல்லது அவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது அல்லது நாம் சொன்ன ஒரு விஷயத்தை அவர் தவறாக எடுத்துக் கொள்கிறார். அதனால் அவர் நம்மை தாக்கி பேசி விட்டார் என்றால் மனம் துடிதுடித்துப் போகும். இது எதிரி என்ற அடிப்படையில் வரும் பகை அல்ல.ஒரு வருத்தம் .அவர்களோடு இப்படிப்பட்ட பிரிவு வந்ததையே மனம் விரும்பாது.
ஆனால் ஒரு மனிதனுக்கு சிறுவயதிலிருந்து உனக்கு இணையான வயதிலுள்ள அல்லது உன் பக்கத்தில் வாழ்கின்ற ஒருவர் எப்போதும் ஏதோ ஒரு வகையில் உன்னை விட சிறந்து இருப்பதாக உனக்கு தோன்றினால், இதுவே வளர்ந்த பிறகு ஒரு காழ்ப்புணர்ச்சி ஆக மாறும் பொழுது, அவர்கள் மீது நீங்கள் கொள்ளும் எதிர்ப்புகள், சமூகத்தில் இருப்பவர்களுக்கும், உங்களின் மற்ற உறவுகளுக்கும் தேவையற்றதாக தோன்றும்.
அவரை நீங்கள் எதிர்த்தாலும், சமுதாயம் உங்களை தான் தவறாக நினைக்கும் ஏனென்றால் அவர் உங்களுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. அவர் சுயமாக சிறப்பாக இருக்கின்றார் அவ்வளவுதான். அப்படி என்றால் உங்கள் மனம் அவரை தாராளமாக எதிர்க்க வேண்டும் என்றால் அவர் தரப்பில் ஏதாவது தவறு உண்டாக வேண்டும். அதுவும் தனிப்பட்ட தவறு அல்ல. உங்களுக்கு எதிரான, உங்களை எதிர்க்கின்ற செயல். அப்படி ஒரு நிகழ்வு மட்டும் நடந்துவிட்டால் அவர்களை எதிர்ப்பது உங்களுக்கு சுலபம். யாருக்கும் விளக்கம் தரத் தேவையில்லை. உங்களுக்கு அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சரி அவ்வாறு தவறு நடந்துவிட்டது. அவர்கள் உங்களை எதிர்க்கின்ற சந்தர்ப்பமும் வந்துவிட்டது. எதிர்த்து விட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
கொஞ்ச நாள் கழித்து அவர்கள் உங்களிடம், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டீர்கள் . நான் அப்படி சொல்லவில்லை என்று அவர் அதை விளக்க முற்பட்டால், அந்த விளக்கம் உங்களுக்கு தேவை இருக்காது.
அதை விளக்குவதற்கு முதலில் வாய்ப்பே கொடுக்க மாட்டீர்கள்.
ஆனால் இதுவே உங்களுக்கு மிகவும் பிடித்த உறவாகவோ , நண்பராகவோ இருப்பின், அவர்கள் ஏதோ ஒரு வார்த்தை பேசி அதனால் நீங்கள் மனம் வலியால் துடித்து ,அவர் மறுபடி வந்து நான் இப்படி தான் சொன்னேன் என்று விளக்கம் சொன்னால் அதை நீங்கள் மனதார ஏற்றுக் கொள்வீர்கள்.
ஏனென்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் நல்லது தான் இருக்க வேண்டும்.நல்லுறவு தான் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம்.
ஆனால் உங்களுக்கு பிடிக்காத நபர், அவரைப்பற்றி தவறு என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை, அவர் துடைப்பதற்கு வாய்ப்பை ஒரு போதும் தரப்போவதில்லை. ஏனென்றால் உங்களின் தேவை அவர் பக்கம் குற்றம் இருக்க வேண்டும். அதுவும் உங்களை நோக்கி இருக்க வேண்டும். அப்போதுதான் அவரை வெளிப்படையாக தாக்க முடியும். தாக்கினால் சுற்றி இருப்பவர், சமுதாயத்தில் இருப்பவர்கள், உங்கள் தாக்குதலில் நியாயம் இருப்பதாக தெரிய வேண்டும்.
இப்படிப்பட்ட எதிரிகளுக்கு அவர்கள் தவறு செய்யவில்லை என்று உள் மனதுக்கு தெரிந்தாலும், அவர்கள் பக்கம் தவறு ஏற்பட்டால் மட்டும் தான் அவர்களை வெளிப்படையாக, தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை காரணத்தோடு காட்டுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
இப்படிப்பட்ட எதிரிகளின் மனதில் அவர்கள் விரும்பும் மனிதர்களை விட நீங்களே நிறைந்து இருக்கின்றீர்கள்.
உதாரணத்துக்கு மகாபாரதத்தில் கிருஷ்ணன் என்ன சொன்னார் என்றால், சகுனியின் வாழ்நாள் முழுக்க என்னுடைய அசைவுகளை கவனித்துக் கொண்டு அடுத்து நான் என்ன செய்வேன் என்பதைப் பற்றிய நினைப்பு தான் இருந்தது. அது என் மீது நல்ல விதமாக இருந்தது அல்லது கெட்ட விதமாக இருந்தது என்பது முக்கியமல்ல. ஆக மொத்தத்தில் வாழ்நாள் முழுக்க என் நினைவாகவே சகுனி இருந்தான். அதுவே எனக்கு ஒரு வெற்றிதான் என்றார்.
இந்த பதிவில் நான் மிக முக்கியமாக சொல்ல வருவது என்னவென்றால் உங்களிடம் எந்த தவறும் இல்லாமல், உங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட எதிரிகள், அவர்களிடம் அன்பு கொண்டவர்களை நினைப்பதை விட உங்களைப் பற்றி வாழ்நாள் முழுக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்பது ஒன்று. உங்கள் பக்க நியாயத்தை எப்போதும் விளக்குவதற்கு அல்லது துடைப்பதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த இரண்டு விஷயம் தான்.
ஆக மொத்தத்தில் உன்னை போட்டு தாக்குவதற்கு உன்னிடம் தவறுகள் குவிய வேண்டும் .இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது அவர்களுக்கு விளக்கம் தருவதை தவிர்க்க வேண்டும் .அவர்களின் உச்ச சந்தோசம், நீங்கள் விளக்கம் தரும் நேரம் வரும் போது அதை மறுப்பதற்கு காத்துக் கொண்டிருப்பார்கள்.
