எதிரிக்கு தெரியவேண்டும் உன்னை ஜெயிப்பது கடினம் என்று(எதிரி-3)

  • by

நான் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு இருக்கின்றேன். எதிரி எதிரி என்று. உங்க மனதில் கேள்வி எனக்கு கேட்கிறது. எதிரியா அது யார்? அப்படி யாரும் இல்லையே! என்று சிலர் நினைக்கக்கூடும். உங்களுக்கு சில மன  வலிகள், வருத்தங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

நாம் சினிமாக்கள் புராணக்கதைகளில் எதிரி என்றால், அரசன் மற்றும் எதிரிநாட்டு சேனைகளும் படைகளோடு வருபவன் என்றும், அல்லது மாடர்ன் காலத்தில் கன் வைத்து வருவதும், கத்தியை கொண்டு வருவதும் என்றுதான் பார்த்து பழகி விட்டோம்.

தொலைக்காட்சி தொடர்களில் அடுத்தவர் வாழ்வை கெடுப்பதாக சில உத்திகளை கையாள்வதால், நாம் எதிரி என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு அனுமானம் இருக்கின்றது. போன  பகுதியில் சொன்னதுபோல்….  விலங்குகள், மனிதர்கள், புல், பூண்டு அனைத்துக்கும் பகை  உண்டு.

நினைத்ததை அடைய முயலும் பொழுது, அதை குறுக்கீடு செய்தாலும் அல்லது நம்முடைய வெற்றியை தள்ளி போட முயற்சிக்கும் அனைத்து உயிருள்ள உயிரற்றவைகளும் எதிரிகள் தான்.   பெரும் லட்சியங்கள் மட்டும் இருந்து பயனில்லை.  திக்கற்றவனுக்கு தெய்வம் துணை என்ற பழமொழி உண்டு. அதாவது எல்லாத் திசைகளும்  தெரிந்தவனுக்கு அவனே கடவுள் ஆகின்றான்.

திசைகள் என்பது,  திசை மட்டுமன்றி  தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கிரகிக்கும் அந்த அறிவும் அதில் அடங்கும். இந்தப் பகுதியில் நான் சொல்ல வந்ததே…. எதிரிக்கு உன்னை ஜெயிப்பது கடினம் என்பதை உணர்த்த வேண்டும் என்பதுதான்.

 1.முதல் பகுதியில் உன் வெற்றிக்கு காரணம் உன்எதிரிதான் என்பது அவனுக்கே தெரியாது என்று கூறினேன். 2.இரண்டாம் பகுதியில் எதிரிக்கு தெரியக்கூடாது நீ எப்படி வெற்றி பெறுகின்றாய்  என்று கூறினேன். அதாவது ஒரு வெற்றியின் பின்னால் பல உக்திகள்  இருக்கும். அது அவர்களுக்கே  தெரியக்கூடாது என்று கூறினேன்.

3.இந்தப் பகுதியில் நான் சொல்வது….

நீ வெற்றி பெற தகுதியானவன் என்றும், ஏற்கனவே சில வெற்றிகளை பெற்றவன் என்றும், நீ உறுதியானவன் என்றும், சில சூட்சுமங்களை கொண்டவன் என்றும், நீ விட்டுக் கொடுக்கக் கூடியவன் அல்ல என்றும், உன்னை ஜெயிப்பது கடினம் என்றும், எதிரி  மனதில் தினமும் நீ விதைக்க வேண்டும்.

ஆனால் அவன் எதிரில் உன் தந்திரங்கள், சூட்சுமங்கள் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்று கூறவில்லை. அதற்கான சமிக்கைகளை அல்லது ஒரு தோற்றத்தை அவனுக்கு காட்ட வேண்டும். உதாரணத்துக்கு மகாபாரதத்தில் கிருஷ்ணர் சமரசம் பேச, அதாவது பாண்டியர்களோடு சண்டையிட வேண்டாம் என்று, துரியோதனனுக்கும் அவருடைய தந்தை திருதராஷ்டிரனுக்கும் சொல்வதற்காக, அவர்களுடைய அரண்மனைக்குச் செல்கிறார் கிருஷ்ணர் . பாண்டியர்கள் பக்கம் கிருஷ்ணர் இருக்கப் போகின்றார் என்பது ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்தது தான். கிருஷ்ணர் யார் பக்கம் இருக்கின்றாரோ அவர்கள் பக்கம் வெற்றி நிகழும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் பீஷ்மர், துரோணாச்சாரி போன்றோர் கௌரவர் பக்கம் நிற்கிறார்கள் என்ற தைரியம் அவர்களுக்கு இருந்தது. அவர்களெல்லாம் விருப்பத்தோடு அவர்கள் பக்கம் நிற்கவில்லை அது வேறு விஷயம். ஆனால் இன்னொரு விஷயம் அதே அளவு மிகுந்த அரசியல் சூட்சுமம் தெரிந்தவர் விதுரர் ஆவார். விதுரர் யார் பக்கம் இருக்கின்றாரோ அவர்களும் ஜெயிக்க கூடும் என கௌரவர்களுக்கு தெரியும். சமரசம் செய்யப் போன போது கவுரவர் மாளிகையில் கிருஷ்ணர் தங்க முடிவெடுத்தார்.

 கௌரவர் மாளிகை, விதுரன் மாளிகை எல்லாம் அருகருகே இருக்கும். கிருஷ்ணரை வற்புறுத்தியும்  கௌரவர் மாளிகையில் தாங்காமல்   விதுரன் மாளிகையில் தங்கினார்.  அதாவது கௌரவர் மனதில் சில சந்தேகங்களை விதைக்கவேண்டும்.

 ஒருவேளை விதுரரும் அவர்களின் பக்கம் சேர்ந்து விடுவாரோ  என்ற அச்சத்தை கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் அன்று  இரவு அங்கு  தங்கி, விதுரரின் மனதை மாற்றி, பாண்டவர் பக்கம் இருக்க செய்து விடுவாரோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஆக விதுரர், கிருஷ்ணர் இருவருமே பாண்டவர் பக்கம் தான் என்றாகி விட்டால், போர்க்களம் போக வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் பக்கம் வெற்றி நிகழ்வது உறுதி ஆகிவிடுகின்றது. என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே விதுரர் மாளிகையில் கிருஷ்ணர் தங்குகிறார்.

ஆனால் எளிமையாக அவருக்குப் பிடித்த கீரை உணவை அன்று இரவு சாப்பிட்டுவிட்டு விதுரரோடு  பெரிதாக எதுவும் பேசவில்லை. ஏனென்றால் எதற்காக கிருஷ்ணர் இங்கு  தருகின்றார் என்று விதுரருக்கே  தெரியாது. இப்படித்தான் நாம் வெற்றியாளன், பலசாலி என்று எதிரிக்கு சூட்சுமமாய் உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

விதுரர்  என் பக்கம் தான் இருக்கின்றார் என்று கிருஷ்ணர் பொய்யாக கூட சொல்லி இருக்கலாம். ஆனால் மகாபாரதத்தில் நிறைய இப்படி எல்லாம் சொல்லாமலேயே மற்றவர்களை குழப்பி சில தந்திரங்களை செய்வார் கிருஷ்ணர்.  வாய்விட்டு சொன்னால் அது தர்மம் ஆகாது. போர் தர்மங்களை மீறியதாக ஆகும்.  தர்மங்களை மீறுவதும் இல்லை ஆனால் சூட்சுமங்கள் பயன்படுத்தப்படும். இவைகள்தான் கிருஷ்ணரின் மகாபாரத உத்திகள் என்று கூறலாம்.

இரண்டு மூன்று இடங்களில் வேறு வழியே இல்லாமல் தீயவர்களை அழிக்க, பின்னால் வரும் தலைமுறைகள் செழிக்க,தவறு செய்பவருக்கு  பாடம் புகட்ட சில  தர்மங்களை மீறியும் இருக்கின்றார். ஆகவே வழியே இல்லை  என்று மீறினாலும்,அவர் கடவுள் ஸ்தானத்தில் இருக்கிறார். இப்படி வழியில்லாது சமயங்களில் கடவுளிடம் நாம் உருக்கமாக முறையிட்டால், தியானங்கள் செய்தால்… அந்த தர்மத்தை மீறும் விஷயத்தை அவரே செய்து முடித்து விடுவார் ..ஆகவே சூட்சுமங்களை செய்தாலும்  அதிலும் கூட தர்மங்கள், நேர்மைகள் காப்பாற்றப்பட வேண்டும். அதுவே எதிரியை ஆழமான வெற்றி கொள்வதற்கு வழிவகுக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன