உலகில் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்துவது,இப்படிப்பட்ட உயிருக்கு உயிரானவர் என்ற போர்வையில் எதிரிகளாய் இருப்பவர்கள்தான். இது முதுகில் குத்துவது ஆகும். போர்க்களத்தில் முதுகில் குத்தினால், குத்தியவனுக்கும் அவமானம்.குத்துபட்டவனுக்கும் அவமானம். நேருக்கு நேர் மோதுவதற்கு வீரம் இல்லை. அதனால் முதுகு பக்கமாக சென்று தாக்கினான் என்று குத்தியவனுக்கு அவமானம். தாக்கப்பட்டவன் ஏன் அவமானத்துக்கு உட்படுகிறான் என்றால், அவன் எதிர்கொள்ள முடியாமல் புறமுதுகு காட்டி ஓடி இருப்பான். அதனால் முதுகு பக்கமாக குத்தப்பட்டு இருக்கலாம் என்று, அவமானம் அவனுக்கும் கிடைக்கின்றது. எதிர்த்து சண்டையிட்டு இருந்திருந்தால் மார்பில் அல்லவா அம்பு பட்டிருக்க வேண்டும், என்ற தீர்மானம் வந்துவிடுகின்றது.
அம்பு எய்தவன் பின்னால் வந்து தாக்கியிருந்தாலும், அடிபட்டவன் எதிர்க்க முடியாமல்தான் ஓடி இருப்பான் என்றுதான் பார்க்கப்படுகின்றது. ஒருவேளை சாட்சி இருந்தால், பல பேர் பார்த்து இருந்தால் அந்த சமயத்தில் அம்பு எய்தவன் மட்டும் அவமானப்பட்டு இருப்பான். அப்படி இருந்தும் கூட அம்பு தைக்கப்பட்டவன் மார்பில் ஒரு அம்பை குத்தி, இவன் வீர மரணம்தான் அடைந்தான் என்று சொல்லி அடக்கம் செய்வார்கள். தவறு அவனுடையது அல்ல என்றாலும் முதுகில் குத்தப்பட்டவன் நிலை,100 சதவிகித மதிப்பெண் எடுத்தவர் அருகில் 95 சதவிகித மதிப்பெண் எடுத்தவன் மாதிரிதான் பார்க்கப்படுகின்றது.
அப்படி என்றால் 100% மார்க் ஒரு வீரன் எடுக்க வேண்டுமென்றால், போர்க்களமானாலும், அரண்மனையில் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு அரசியல் கூட்டங்கள் நடந்தாலும், வீரனின் கவனம் முன்னால் இருப்பதைவிட பின்னால் அதிகமாக இருக்க வேண்டும். விழித்திருக்க வேண்டும். தூக்கத்தில் இருந்தாலும், விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை புற முதுகில் குத்துவது மட்டுமல்லாமல், முதுகில் குத்தும் சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும். விழித்திருக்க வேண்டும். இவன் போய் இதை செய்வானா? இவன் நம் ரத்தம் ஆயிற்றே! இவன் போய் இதை செய்வானா? இவனுக்கு சிறுவயதிலிருந்து நம்முடைய தந்தை உதவி இருக்கின்றாரே! இவன் செய்வானா? இவன் நம் வீட்டில் பல காலமாக உடன் வாழ்கிறான் என்று கண்ணை மூடிக்கொண்டு இருக்காமல், அன்றாட நிகழ்வுகளை கவனிக்க வேண்டும்.
சில சமயம் தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாயுடன் பெற்ற பிள்ளைகள் கூட எதிரியாகும் சந்தர்ப்பம் வரலாம். பெற்றவர் உங்கள் பக்கம் நில்லாது, அவர்களுக்கு பிறந்த வேறு பிள்ளையோடு இணையும் சந்தர்ப்பம் வரலாம். அந்த பிள்ளை வெகு நாளைக்கு முன்பே உங்களுக்கு எதிரி ஆனது, உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். காலத்தின் கோலம் எதுவும் செய்யும்.
ஒரு முகலாய அரசர் தன் சொந்த தந்தையைக் கொன்று இருக்கின்றார். சென்னையில் ஒரு காம வெறியன் தன் தாயை கொன்று இருக்கின்றான்.
இந்திய ராமாயணம் ,மஹா பாரதம் மட்டும் அல்லாமல் உலகின் எல்லா சாம்ராஜ்யங்களின் பெரும் பகைகள் அனைத்துமே, உடன் பிறந்தவர் ஆணோ, பெண்ணோ அல்லது உடன் பிறந்தவரின் பிள்ளைகளை, ஆங்கிலத்தில் சிப்லிங்க்ஸ் என்று அழைக்கப்படுபவற்கு இடையே ஏற்பட்ட யுத்தங்கள் தான் .
ஆகையால் தான் அதை நேப்போடிசம் என்றும் சொல்லபடுகிறது.ஆனால் இந்த நேபோடிசம் தொழில் போட்டி ,நண்பர்கள் இடையேயும் உள்ளது .ஆரம்ப காலத்தில் உடன் பிறந்தவராய், ரத்த பந்தம் இருந்த போதே கொண்ட பகையால் தான் இதற்கு நேப்போடிசம் என்ற பெயர் வந்தது .ஆங்கிலத்தில் உடன் பிறந்தவரின் பிள்ளைகளை ‘நெப்யூ’ என்பதால்தான் இப்படி பட்ட பகைக்கு நேப்போடிசம் என்ற பெயர் வந்தது ..இந்த நெப்போடிசம் எங்கெல்லாம் செயல் படுகிறது என்பதை வேறு பதிவில் பார்க்கலாம் .பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ,தெற்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி, உலகின் எல்லா நாடுகளின் அரச சாம்ரஜ்யங்களிலும் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் அளவு பகை இருந்தது …மனிதர்களுக்குள் அது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் ஆகிவிட்டதால் நேப்போடிசம் என்றே பெயர் சூட்டினர் …தமிழில் பங்காளி பகை என்று பல்லாயிரம் வருடம் முன்பே பெயர் சூட்டினர் .ஒரே ரத்த சம்மந்தம் உடையவர் .சொத்துகளை சமமாய் பிரித்து கொள்ளும் ஆண் வர்கத்தினர் .ஏன் என்றால் உலகின் ஆரம்ப காலங்களில் ஆணைதான் வாரிசாகவும் ,சொத்துகள் அவர்களுக்கே பிரித்தளிக்க வேண்டும் என்ற முறை இருந்தது.இன்று பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம் வந்தாலும் இன்னும் நடை முறைக்கு வரவில்லை .
ஆக எதிரி என்றே சொல்லப்படும் வெளிப்படையான எதிரிகள் எல்லாம் படையின் எதிர் வரிசையில் நிற்பவர்கள். அவர்களை வெல்வது, உன் திறமை, பலம், புத்திசாலித்தனம். ஆனால் உறவாடி பகை கொண்டவர்கள், உங்கள் பின்னால் வந்து முதுகுப் பக்கத்தில் இருந்து தாக்குபவர்கள். கண்களுக்கு தெரியாத படை வரிசையாகும். உன் திறமை, பலம்,புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் திரைபோட்டு மறைக்க கூடிய ஒரு விஷ ஆயுதம் அவர்கள் கையில் உள்ளது.
எதிர் வரிசையில் இருப்பவர்களை விட, இப்படி கண்ணுக்குத் தெரியாத பகைவர்களை அழிப்பது அல்லது புரிந்து கொள்வது அல்லது தெரிந்து கொள்வது மிகக் கொடூரமானது. எதிர் வரிசை அம்பு தலையை சீவி விடும். பின்னால் இருக்கும் அம்பு இதயத்தை கிழித்துவிடும். எதிர் அணி அம்பு உடலை கிழிப்பதால் இந்த ஜன்மத்தில் முடிந்து விடலாம். ஆனால் இதயத்தை கிழித்து விட்டால் அது வலி நிறைந்த ஆத்மாவாக பல ஜென்மங்களுக்கு தொடர்கிறது.
இந்த பதிவை பொருத்தவரை உறவாடி, அன்பு பாராட்டி, உங்களிடம் மிகுந்த இணக்கமாக இருந்து கொண்டே உங்களை கெடுக்க பார்ப்பதோ, அல்லது பொறாமை கொள்வதோ, சூழ்ச்சி செய்வதோ போன்ற விஷயங்களை செய்கின்ற உறவுகள், நண்பர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். விழிப்போடு இருங்கள் என்று மட்டும்தான் கூறுகின்றேன். அதற்காக எல்லோரையும் சந்தேகப்படும் மனப்பான்மைக்கு சென்று விடக்கூடாது.
அடுத்த போஸ்டில் இப்படிப்பட்டவர்களை கண்டுபிடிப்பது மட்டும் அல்லாமல் எப்படி வகைப் பிரிப்பது? எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதைப்பற்றி எல்லாம் பார்க்கலாம்.
